

தென்கொரியாவில் கரோனா இரண்டாம் கட்ட பரவல் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 136 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம் தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 136 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தென்கொரியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22,055 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 5 பேர் பலியாக இதுவரை தென்கொரியாவில் 355 பேர் பலியாகி உள்ளனர். தென் கொரியாவில் இறப்பு விகிதம் 1.61% ஆக உள்ளது. மேலும் இதுவரை 18,029 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் தலைநகரான சியோலில் நோய்த்தொற்றுகள் பரவி, நாடு தழுவிய அளவில் பரவக்கூடிய அச்சுறுத்தலில் நாம் இருக்கிறோம் என்று தென்கொரிய தலைவர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்கள் சமூக இடைவெளியை பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு தென்கொரிய அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணித்திருந்தோம். ஆனால், எங்கள் கணிப்பு பொய்யாகியுள்ளது. மே மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் மக்கள் புழக்கம் அதிரிகத்தது. அதன் விளைவாக தற்போது இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று தென்கொரிய நோய் தடுப்பு மையம் முன்னரே தெரிவித்து இருந்தது.