Published : 08 Sep 2015 10:27 am

Updated : 08 Sep 2015 10:27 am

 

Published : 08 Sep 2015 10:27 AM
Last Updated : 08 Sep 2015 10:27 AM

உலக மசாலா: வீட்டுக்குள் தேனீ வளர்ப்பு

தேனைச் சுவைக்கும் அளவுக்குத் தேன் கூட்டை யாரும் ரசிப்பதில்லை. ஆனால் வீட்டுக்குள்ளேயே தேனீக்களை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் அமெரிக்கர்கள். பீகோ சிஸ்டம் என்ற பெயரில் வீட்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் தேனீக்களில் இருந்து ஏராளமான தேனைப் பெறுகிறார்கள். மீன் வளர்ப்பு போல சுவற்றில் தேனீ வளர்க்கும் கூட்டைப் பொருத்திவிடுகிறார்கள். குழாய் வழியாக வெளியில் இருந்து கூட்டுக்குள் தேனீக்கள் வந்து செல்கின்றன. வீட்டுக்குள் தேனீக்கள் சுற்றித் திரிவதில்லை.

அதனால் வீட்டில் உள்ளவர்களுக்குப் பயமில்லை. தேனீக்கள் அதிகம் பெருகிவிட்டால், இன்னொரு கூட்டையும் எளிதில் இணைத்து விடலாம். கூட்டைப் பராமரிப்பதும் கழிவுகளை அப்புறப்படுத்துவதும் எளிது. ஒவ்வொரு கூட்டில் இருந்தும் அரை கிலோ தேன் கிடைக்கும். வீட்டுக்குள் தேனீ வளர்க்கும் திட்டத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான மைக் ஸாங்கிள், ‘’ஒரு கூட்டின் விலை 30 ஆயிரம் ரூபாய் என்றாலும் தேனீ வளர்ப்பின் மூலம் சூழலுக்கும் நன்மை செய்கிறீர்கள், நீங்களே உற்பத்தி செய்த தேனையும் பெறுகிறீர்கள் என்பது எவ்வளவு நல்ல விஷயம்!’’ என்கிறார்.


சூழலுக்கு நல்லது என்றால் செலவு செய்யலாம்!

அமெரிக்காவில் வசிக்கும் 29 வயது நடாலி ஃப்ளெட்சர், மனித உடலில் ஓவியங்கள் தீட்டக்கூடியவர். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து, 200 நாட்களில் 101 மனித ஓவியங்களைத் தீட்டும் பணியைச் செய்து முடித்திருக்கிறார். சுவர், கட்டிடங்கள், தாவரங்கள், மலைகள் என்று ஏராளமான ஓவியங்களை வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். 200 நாட்களில் 30 ஆயிரம் மைல்களைக் கடந்து, 140 மனிதர்களைப் பயன்படுத்தி, இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

பார்க்கும் இடத்தில் இருக்கும் காட்சியை அப்படியே உடலிலும் வரைவதுதான் நடாலியின் சிறப்பம்சம். சட்டென்று பார்த்தால் ஓவியத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இவற்றைப் புகைப்படங்களாக எடுத்து, கண்காட்சியும் வைத்திருக்கிறார். ‘’இந்தத் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் முழுவதும் செல்ல இருக்கிறேன். அதற்கடுத்து உலக நாடுகளுக்குப் பயணமாவேன்’’ என்கிறார் நடாலி.

கலக்குங்க நடாலி!

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இயங்கி வருகிறது ஹாஸ் ஹில்டில் உணவு விடுதி. 1898-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சைவ உணவு விடுதிக்கு வயது 117. மிகப் பழமையான உணவு விடுதி என்ற கின்னஸ் சாதனையையும் பெற்றிருக்கிறது. இந்த விடுதியில் இந்திய உணவுகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. ஜெர்மனில் இருந்து வந்தவர்கள், சைவ உணவுப் பழக்கத்தைப் பரப்பும் விதத்தில் இந்த விடுதியை ஆரம்பித்திருக்கிறார்கள். ஹில்டில் குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது தலைமுறையினர் இதை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், அலுவல் ரீதியான பயணத்தின்போது இங்கே வந்து சாப்பிட்டிருக்கிறார். ‘’எங்களுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எங்கள் நிறுவனரின் மருமகள் டெல்லிக்குச் சென்று, இந்திய உணவுகளைக் கற்றுக்கொண்டு வந்தார். இந்திய, கிரேக்க, தாய், லெபனான், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய உணவுகள் இங்கே எப்பொழுதும் கிடைக்கும்’’ என்கிறார் ஹெடிகெர். சாம்பார் வடை, பாலக் பனீர், விதவிதமான சட்னிகள், சாலட்களை ருசிக்க இந்தியர்கள் படையெடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் வாழை இலை சாப்பாடும் வடஇந்திய தாலியும் கிடைக்கின்றன.

அடடா!

அமெரிக்காவின் மசசூசெட்ஸ் கடற்கரையில் 11 அடி நீளம் கொண்ட சுறா மீன் ஒன்று கரை ஒதுங்கியது. அங்கே வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சுறாவைக் காப்பாற்றி, கடலில் விடுவதற்கான வேலைகளில் இறங்கினர். தண்ணீர் இன்றி இறந்து விடக்கூடாது என்பதற்காக, வாளியில் தண்ணீரை எடுத்து வந்து சுறா மீது ஊற்றிக்கொண்டே இருந்தனர். இன்னும் சிலர் மணலில் சுரங்கம் தோண்டினர். சுரங்கத்தின் வழியே சுறாவைக் கடலில் சேர்க்க முயற்சி செய்தனர். காவல்துறையினர் சுறாவை மீட்டு, கடலில் விட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் சுறா இறந்து, கரையில் ஒதுங்கியது. ’’ஏற்கெனவே உடல் நலமின்றியோ, காயம் காரணமாகவோ சுறா கரை ஒதுங்கியிருக்கிறது. எத்தனையோ பேர் முயன்றும் பெரிய சுறாவைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது’’ என்கிறார்கள் காவலர்கள்.

அடப்பாவமே…
உலக மசாலாவீட்டுக்குள் தேனீ வளர்ப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x