

சிலி நாட்டின் வடக்குக் கடலோரப்பகுதியான இலாபெல்லில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடற்கரை ஊர்களைசிறிய சுனாமி அலைகள் தாக்கின.
வியாழன் அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் இலாபெல் நகருக்கு மேற்கே 55கிமீ தொலைவில் இருந்ததாக யு.எஸ்.ஜி.எஸ். கூறியுள்ளது. பூமிக்கு அடியில் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடல் பயங்கரக் கொந்தளிப்புடன் சீறி கடற்கரை ஊர்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த பயங்கர நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏகப்பட்ட பின் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடற்கரை பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் அவ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் அர்ஜெண்டீனாவின் பியூனெஸ் அய்ரஸ் நகரம் வரை இதன் தாக்கம் உணரப்பட்டது. இலாபெல் நகரில் சில வீடுகள் இடிந்தன.
பலியான 5 பேரில் இருவர் பெண்கள் என்றும் ஒருவர் மாரடைப்பினால் காலமானதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து தென் அமெரிக்க நாடான பெரு, மற்றும் ஹாவாய் தீவுகளின் சில பகுதிகள், கலிபோர்னியாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது நிலநடுக்கத் தாக்கத்தினால் நியூஸிலாந்து வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய சிலியின் நாஸ்கா கண்டத் தட்டு, தென் அமெரிக்க கண்டத் தட்டுக்கு அடியில் சென்றதால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாஸ்கா கண்டத் தட்டு கிழக்கு-வடகிழக்காக ஆண்டுக்கு 74மிமீ நகர்ந்து வருகிறது.