

சீன சமூகவலைத்தள வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பதற்கான இறுதிக் கெடு தேதியான செப்.15-ஐ நீட்டிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஒன்று டிக்டாக்-ஐ விற்க வேண்டும் இல்லையேல் மூட வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் திட்டவட்டமாக இருக்கிறார்.
முதலில் பைட் டான்ஸ் நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவதற்குப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் ட்ரம்ப் இது தொடர்பாகக் கூறும்போது, “இறுதிக்கெடுவை நீட்டிக்கப்போவதில்லை. ஆம். செப்.15 இறுதிக்கெடு. டிக்டாக் இறுதிக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது.
என்ன நடக்கிறது என்று பார்ப்போம், ஒன்று செயலியை விற்க வேண்டும் இல்லையேல் மூட வேண்டும். ஆகவே பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக் டாக் செயலியை மூடப்போகிறோமா அல்லது அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்போகிறார்களா என்பதைப் பார்ப்போம்” என்றார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா தான் முதலில் டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்குத் தடை விதித்தது. இது குறித்து அமெரிக்க முன்னிலை அதிகாரிகள் இந்தியாவைப் பாராட்டியதோடு அதே போன்ற நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ட்ரம்ப்பின் திட்டவட்ட நீட்டிப்பு மறுப்பு அறிவிப்பு டிக் டாக் குறித்த முடிவை ஆவலுடன் எதிர்நோக்க வைத்துள்ளது.