

உலகம் முழுவதும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 9,00,079 ஆக அதிகரித்துள்ளது. 2.7 கோடிக்கு அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.8 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கரோனா வைரஸால் 1,95,239 பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 1,28,653 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 75,091 பேர் பலியாகி உள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள மெக்சிகோவில் 69,095 பேர் பலியாகி உள்ளனர்.
உலகின் பல முன்னணி நாடுகளும் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி வல்லுநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.
கிட்டத்தட்ட அந்தத் தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனை நிலையை எட்டியது. இந்நிலையில் சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் சீரியஸான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.