

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளின் காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்ட, 'வீடியோ'வை, குடியரசு கட்சி வெளியிட்டது. இதன்மூலம், இந்திய வம்சாவளியினரின் வாக்கு வங்கியைத் திரட்ட முடியும் என அக்கட்சி நம்புகிறது.
அமெரிக்காவில், நவம்பர் 3ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். இங்குள்ள முக்கிய மாகாணங்களில், வெற்றியை தீர்மானிக்கும் மக்களாக, இந்திய வம்சாவளியினர் இருக்கின்றனர்.
இவர்களை தங்கள் வாக்கு வங்கிகளாக மாற்ற ஜனநாயக கட்சி, துணை அதிபர் வேட்பாளராக, இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசை களமிறக்கியது. இது, ஜனநாயக கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் கட்சி கமலா ஹாரிஸை கடுமையாகத் தாக்கிப் பேசி தவறிழைத்து வருகிறது.
இதற்கு ஒரு பதிலியாக தற்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவை பிரதிபலிக்கும் வீடியோவை குடியரசு கட்சி, கடந்த மாதம் வெளியிட்டது.'மேலும் நான்கு ஆண்டுகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவின் துவக்கத்தில், கடந்த ஆண்டு, ஹூஸ்டனில், அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்ற, 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியின் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல், இந்த ஆண்டு துவக்கத்தில், குஜராத்தின் அகமதாபாதில் நடந்த, 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியின் சில காட்சிகளும், இதில் இணைக்கப்பட்டுள்ளன. வீடியோவின் இறுதியில், இந்தியா மீது, அமெரிக்கா வைத்துள்ள விசுவாசத்தை, அதிபர் டிரம்ப் வெளிபடுத்துவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.