

இராக் நாட்டில் தலைநகர் பாக்தாத் உள்பட 9 இடங்களில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்தன. இதில் 28 பேர் உயிரிழந்தனர். முகமது நபியின் மருமகனான இமாம் அலியின் பிறந்தநாளை ஷியா பிரிவு முஸ்லிம்கள் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
இதை சீர்குலைக்கும் வகையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் கார்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. பாக்தாதின் புறநகர்ப் பகுதியான சதார் நகரில் கார் குண்டு வெடித்து 4 பேர் பலியாகினர். அதே பகுதியில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல் ஜமாலியா பகுதி, கிழக்கு பாக்தாதில் தலா 3 பேரும் பாக்தாத் சதுக்கத்தில் 2 பேரும் யுர் பகுதியில் 5 பேரும் உயிரிழந்தனர்.
இவை உள்பட மொத்தம் 9 இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவங் களில் இதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப் பேற்கவில்லை. சிரியாவில் அரசுக்கு எதிராகப் போரிட்டு வரும் தீவிரவாதக் குழுக்களுக்கு குண்டுவெடிப்பில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.