

ஆப்பிரிக்க நாடான சூடானில் வெள்ள பெருக்கு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு மூன்று மாதகால அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சூடான் அதிகாரிகள் தரப்பில், “சூடானில் கடந்த ஒரு மாதமாக கடுமையான மழை பெய்ததன் காரணமாக கடுமையான வெள்ள ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த வெள்ள பெருக்கில் 99 பேர் பலியாகினர். 46 பேர் காயமடைந்தனர்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. நையில் நதியில் வெள்ளம் ஓடுவது இது புதிதல்ல, ஆனால் இதன் பாதிப்பு இதுவரை கண்டிராதது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வேறு இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூடானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சமாளிப்பதற்காக மூன்று மாத அவசர நிலைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கு குறித்து, ஓமர் அகமத் கூறும்போது, “எங்க வீடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து விட்டது. நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை. எங்கள் வீடுகளை சுற்றி இருந்த 40 வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துவிட்டன” என்று தெரிவித்தார்.
சூடானில் வழக்கமாக ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்கள் பருவ மழை காலமாகும். சூடானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பருவ மழைக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.