

ஏமனின் வடகிழக்குப் பகுதியில் ஏமன் அரசு மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடந்த கடுமையான சண்டையில் 28 பேர் பலியானதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏமன் ராணுவம் தரப்பில், ”ஏமனில் வடகிழக்குப் பகுதியான அல் ஜாஃப் பகுதியில் ஏமன் அரசுக்கும், அரசுப் படைக்கு நடந்த சண்டையில் 28 பேர் பலியாகினர். இதில் 18 பேர் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், 10 பேர் ஏமன் அரசுப் படையை சேர்ந்தவர்கள். தொடர்ந்து ஹவுத்தி தீவிரவாதிகளுடன் தொடர்ந்து அப்பகுதியில் சண்டை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
போர் நடந்து கொண்டிருக்கும் ஏமன் போன்ற நாடுகளில் கரோனா மருத்துவ பரிசோதனைகள் குறைவாக நடந்தப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படைகள் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.
ஏமனில் நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.