

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று நம்புகிறோம் என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 30-வது கூட்டம் ஜெனீவாவில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த 16-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
உள்நாட்டுப் போரின்போது ராணுவமும் விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கை அரசு சர்வதேச நீதிமன்றம் அமைப்பதை ஏற்க மறுத்து வருகிறது. போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ள அந்த நாட்டு அரசு தனது நிலைக்கு ஆதரவு அளிக்குமாறு பல்வேறு நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.
இந்நிலையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்க தரப்பில் கடந்த 24-ம் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் இலங்கை நீதித்துறையின் மேற்பார்வையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் சந்தித்துப் பேசினர். அப்போது போர்க்குற்ற விவகாரம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் நிருபர்களிடம் கூறியதாவது:
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரம் இலங்கையின் இறையாண்மைக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுடன் இலங்கை அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. இலங்கை புதிய அரசின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தில் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிடையேயும் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க தீர்மானம் மீது வரும் 30-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் முடிவைப் பொறுத்தே இந்தியா தனது நிலையை தெளிவுபடுத்தும் என்று தெரிகிறது.