சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி: லீ ஹுசின் லூங் மீண்டும் பிரதமரானார்

சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி: லீ ஹுசின் லூங் மீண்டும் பிரதமரானார்
Updated on
1 min read

சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 12-வது முறையாக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மொத்தம் 89 இடங்கள் உள்ளன. ஆளும் மக்கள் செயல் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டி யிட்டது. முக்கிய எதிர்க்கட்சியான பாட்டாளி கட்சி 28 தொகுதிகளிலும் தேசிய ஒருங்கிணைப்பு கட்சி 12 இடங்களிலும் ஜனநாயக கட்சி 11, சீர்திருத்தக் கட்சி 11, சிங்க் பர்ஸ்ட் கட்சி 10, ஜனநாயக கூட்டணி 6, சிங்கப்பூர் மக்கள் கட்சி 8, மக்கள் சக்தி 4 மற்றும் 2 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 உட்பட மொத்தம் 181 வேட்பாளர்கள் களத்தில் இருந் தனர். நேற்றுமுன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமார் 20 லட்சம் பேர் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அன்று இரவு முதல் அறிவிக்கப்பட்டன.

மொத்தமுள்ள 89 தொகுதிகளில் ஆளும் மக்கள் செயல் கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த கட்சி தொடர்ந்து 12-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. கட்சியின் பொதுச் செயலாளரும் தற்போதைய பிரதமருமான லீ ஹுசின் லூங் மீண்டும் பிரதமராகியுள்ளார். சிங்கப்பூர் விடுதலை அடைந்த பிறகு சுமார் 50 ஆண்டுகளாக மக்கள் செயல் கட்சியே ஆட்சி நடத்தி வருகிறது.

சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யூ கடந்த மார்ச் மாதம் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு மக்கள் செயல் கட்சி அவரின் மகன் லீ ஹுசின் லூங் தலைமையில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு சதவீத அடிப்படையில் ஆளும் கட்சிக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆங் மோ கியா தொகுதியில் போடடியிட்ட பிரதமர் லீ ஹுசின் லூங்கிற்கு 78 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in