Published : 02 Sep 2015 10:31 AM
Last Updated : 02 Sep 2015 10:31 AM

உலக மசாலா: பழத்தோல் கைப்பை!

நெதர்லாந்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தூக்கி எறியும் பழக்கழிவுகளில் இருந்து ’பழத்தோல்’ உருவாக்கியிருக்கின்றனர். மாட்டுத் தோலைப் போலவே இந்தப் பழத் தோலைக் கொண்டு பைகள் தைக்கலாம், தாளாகப் பயன்படுத்தலாம். அருகில் உள்ள பழச்சந்தைக்கு மாலையில் சென்று, அழுகிய பழங்களை அள்ளி வருகிறார்கள். பழங்களை வெட்டி, கூழாக்குகிறார்கள். பின்னர் கலவையை அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறுகிறார்கள். பெரிய வடிகட்டிகளின் மீது சிறிது கலவையை ஊற்றி, சமப்படுத்துகிறார்கள்.

சில மணிநேரம் வெப்பத்தில் காய விடுகிறார்கள். பிறகு எடுத்தால் பழக்கலவை உறுதியான தோலாக மாறியிருக்கும். அவற்றை எடுத்து வேண்டிய அளவில் வெட்டி, பிளாஸ்டிக் தாளில் சுற்றி வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். விலங்குகளின் தோல் அளவுக்கு அத்தனை உறுதியாக இல்லாவிட்டாலும் ஓரளவு உறுதியாகவே இருக்கிறது பழத்தோல்.

மாம்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களில் இருந்து அருமையான தோல் கிடைக்கிறது. ஆனாலும் பழத்தோல் தயாரிக்கும் வழிமுறைகளை மாணவர்கள் இன்னும் முழுமையாகச் சொல்லவில்லை. பழத்தோலை வைத்துப் பைகள் தயாரிப்பது தங்கள் நோக்கம் இல்லை என்றும், தோலை வைத்து என்ன செய்ய முடியும் என்பதைத் தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

அட! வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள்!

போர்ட்லாந்தில் வசிக்கிறார் கேலின் கோச். அவருடைய செல்லப் பிராணி லோகி பூனை. இன்று இன்ஸ்டாகிராமில் அதிக செல்வாக்குப் படைத்த பூனையாக வலம் வருகிறது. லோகியின் மிரட்டும் கண்களும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் 2 பற்களும்தான் இதற்குக் காரணம். பார்ப்பதற்கு ரத்தக்காட்டேரி போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது லோகி.

‘‘2 ஆண்டுகளுக்கு முன்புதான் லோகியைத் தத்தெடுத்தேன். அப்பொழுது சாதாரண பூனை போலத்தான் இருந்தது. திடீரென்று ஒருநாள் பூனையால் இமைகளை மூடமுடியவில்லை, 2 பற்களும் இப்படி வெளியே தெரிய ஆரம்பித்தன. பலமுறை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றும், காரணத்தை அறிய முடியவில்லை. இமைகளும் பற்களும்தான் இப்படி அச்சத்தை ஏற்படுத்துகின்றனவே தவிர, பூனை எப்பொழுதும் போல சாதுவாகவே இருக்கிறது. வீட்டுக்கு வருபவர்களும் முதலில் லோகியைப் பார்த்து பயப்படுகிறார்கள். லோகியை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு வருகிறேன். தன் உருவத்தால் லோகி உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது’’ என்கிறார் கேலின் கோச்.

ரொம்ப அதியசமாகத்தான் இருக்கு!

பாம்புகளிலேயே அதிக விஷத்தன்மை உடையவை கடல் பாம்புகள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ட்ரைப் கடலில் வலம் வந்துகொண்டிருந்தார். ஒரு கடல் பாம்பு பாறை மீனை வாயால் கவ்வியிருந்தது. பாறை மீனும் பாம்பின் உடலைக் கடித்தபடி இருந்தது. இரண்டுக்கும் ஏற்பட்ட கடினமான போராட்டத்தின் இறுதியில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இரண்டும் இறந்து போய்விட்டதாக நினைத்தார் ட்ரைப். ‘‘பிராணிகள் மீது எனக்கு அன்பு அதிகம். பாறை மீனின் பிடியில் இருந்து பாம்பைத் தனியாகப் பிரித்து எடுத்தேன். என்ன ஆச்சரியம், பாம்பு உயிருடன் இருந்தது. பாம்பைத் தனியாகவும் மீனைத் தனியாகவும் விட்டேன். சில நிமிடங்களில் மீண்டும் பாம்பு பாறை மீனைத் தேடிச் சென்று இரண்டாவது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டது’’ என்கிறார் ட்ரைப்.

பசி பயமறியாது…

புளோரிடாவில் வசிக்கும் ஸ்டெபானி ரைட்டர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளோமா படிப்பை முடித்தார். இந்த நான்கு ஆண்டுகளில் அந்தப் படிப்புக்கு ஏற்ற வேலை அவருக்குக் கிடைக்கவே இல்லை. மன வருத்தத்தில் இருந்தவர், தன்னுடைய டிப்ளோமா சான்றிதழை இணையத்தில் விற்பனைக்கு வைத்துவிட்டார். தான் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, இந்தப் படிப்பை முடித்திருப்பதால் 33 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்டெபானி. ‘‘நான்கு ஆண்டுகளாக நான் வேலைக்கு அலைவதைப் பார்த்த நண்பர், ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு, ஏன் 4 ஆண்டுகளை வீணாக்கிவிட்டாய் என்று கேட்டார். டிப்ளோமாவை விற்றுவிட்டால், படிப்புக்கு ஏற்ற வேலை செய்ய வேண்டியதில்லை. எந்த வேலை கிடைத்தாலும் பார்க்கலாம்’’ என்கிறார் ஸ்டெபானி.

உங்க டிப்ளோமாவால் உங்களுக்கே வேலை கிடைக்கலை… இதை வாங்கி என்ன செய்யப் போறாங்க?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x