

கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வடக்கு கிரீஸ் மற்றும் தெற்கு துருக்கி ஆகிய பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளுக்கு வந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் இந்த பூகம்பம் 6.9 என்று பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் துருக்கியில் மட்டும் 24 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்கள் குலுங்கியதால் அங்கு வசித்த மக்கள் பீதியில் தெருவுக்கு ஓடி வந்து தஞ்சமடைந்தனர்.
உள்ளூர் நேரம் மதியம் 12.22 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. கிரேக்கத்திவான சமோத்ராக்கி அருகே இதன் மையம் இருந்தது. கிரேக்கத்தின் தெசலோனிகியிற்கு 210 கிமீ கிழக்கு மற்றும் தலைநகர் ஏதென்சிலிருந்து 296கிமீ வடகிழக்கில் இதன் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பம் கிரேக்கத்தின் தெசலோனிகி மற்றும் துருக்கியின் மேற்குக் கடற்கரைப் பகுதி முதல் பல்கேரியா மற்றும் இஸ்தான்புல் வரை உணரப்பட்டுள்ளது. மேலும் பல பின்னதிர்வுகளும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இது நிலநடுக்கப்பகுதி என்றும் ரிக்டர் அளவில் 7 வரை பதிவாகும் நிலநடுக்கங்கள் இங்கு அதிகம் ஏற்படும் என்று அரிஸ்டாடில் பல்கலைக் கழக புவிபௌதிக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது