

சிரியாவின் வடமேற்கில் உள்ள ராணுவ விமான தளத்தை சமீபத்தில் கைப்பற்றிய அல்-காய்தா அமைப்பின் ஆதரவு பெற்ற உள்ளூர் தீவிரவாதிகள், பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 56 ராணுவ வீரர்களை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் ரமி அப்துல் ரஹ்மான் நேற்று கூறும்போது, “இட்லிப் மாகாணத்தில் உள்ள அபு துஹுர் விமான நிலையத்தில், பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 56 ராணுவ வீரர்களை அல்-காய்தா ஆதரவு பெற்ற அல்-நுஸ்ரா முன்னணி மற்றும் இஸ்லாமிய கூட்டுப் படையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தத் தகவல் சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது” என்றார்.
‘ஆர்மி ஆப் கான்க்வெஸ்ட்’ என்ற இஸ்லாமிய கூட்டுப் படையில் முக்கிய உறுப்பினராக உள்ள அல்-நுஸ்ரா அமைப்பு, அபு துஹுர் ராணுவ விமான நிலையத்தை கடந்த 9-ம் தேதி கைப்பற்றியது. அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்களில் சிலரை சுட்டுக் கொன்றதுடன் மேலும் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த கூட்டுப்படை, புவா மற்றும் கப்ரயா உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர இட்லிப் மாகணத்தின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இரண்டு கிராமங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமிய கூட்டுப்படையினர் நடத்திய 9 கார் வெடிகுண்டு தாக்குதலில் 21 ராணுவ வீரர்களும் கூட்டுப்படையைச் சேர்ந்த 17 தீவிரவாதிகளும் பலியாயினர்.