

மெக்சிகோவில் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், அங்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து மெக்சிகோ ஊடகங்கள் தரப்பில், “மெக்சிகோவில் கரோனா பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் கரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் மெக்சிகோ நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மெக்சிகோவில் இறப்புச் சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மெக்சிகோ அதிகாரிகள், ஒரு லட்சம் படிவங்கள் தயார் நிலையில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட பிழைகள் காரணமாக சில சிக்கல்கள் இருந்தன. அதுவே தாமதத்திற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கரோனாவில் 1,92,111 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 1,25,584 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 69,635 பேர் பலியாகி உள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள மெக்சிகோவில் 66,851 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம், நியூசிலாந்து ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.