

பிரிட்டனில் 2 செய்தித்தாள் அச்சகங்களில் சூழலியல் சமூக ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் பல தேசிய செய்தித் தாள்கள் விநியோகத்தையும் கடுமையாகத் தடுத்தனர்.
எக்ஸ்டிங்ஷன் ரிபலியன் என்ற இந்தக் குழு பிராக்ஸ்பர்ன் மற்றும் நோஸ்லி ஆகிய இரண்டு செய்தித்தாள் அச்சகங்களைக் குறிவைத்து மறியலில் ஈடுபட்டனர், இந்த இரண்டும் ஊடக ஜாம்பவானான ருபர்ட் முர்டாக்கிற்குச் சொந்தமான நியூஸ் கார்ப்பரேஷனுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அச்சகங்கள் முர்டாக்கிற்குச் சொந்தமான தி சன் மற்றும் தி டைம்ஸ் ஆகிய செய்தித்தாள்களின் அச்சுக்கூடங்களாகும். இதோடு டெய்லி டெலிகிராப், டெய்லி, மெய்ல், ஃபினான்சியல் டைம்ஸ் ஆகிய இதழ்களும் இங்குதான் அச்சிடப்படுகின்றன.
இந்தச் செய்தித்தாள்கள் புவி வெப்பமடைதல், வானிலை மாற்றம் மற்றும் சூழலியல் நெருக்கடிகளை சரிவர இந்த செய்தி கார்ப்பரேஷன்கள் வெளியே கொண்டு வருவதில்லை. மேலும் இந்தப் பத்திரிகைகள் உண்மையை தங்கள் அரசியல் மற்றும் சொந்த லாபனக்களுக்காக திரித்து எழுதுகின்றன என்று இந்த ரிபல் குழு குற்றம் சாட்டியுள்ளது, இந்நிலையில் 13 பேரைக் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த அச்சுக்கூடங்களை நடத்தும் நியூஸ்பிரிண்டர்ஸ், கூறும்போது, சுதந்திர ஊடகங்களை இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குகின்றனர் என்று கூறியுள்ளது, உள்துறை செயலர் பிரீத்தி படேல் இது சுதந்திர ஊடகம், சமூகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சாடினார்.
கடந்த திங்கள் முதலே இந்த எக்ஸ்டிங்ஷன் ரிபலியன் குழு பல பிரிட்டிஷ் நகரங்களில் சாலை மறியலிலும், பெரிய பாலங்களில் மறியலும் செய்து இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தனர்.
இதனை ஒத்துழையாமை இயக்கம் என்று அவர்கள் வர்ணிக்கின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே போல் இந்த எக்ஸ்டிங்ஷன் ரிபலியன் உழு 10 நாட்கள் எழுச்சிப் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து வர்த்தகம் ஆகியவை பாதிக்கப்பட்டது, சுமார் 1700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.