கார்கில் போர் ஏற்பட்டபோது அமைதி ஏற்படுத்த பாலிவுட் நடிகர் திலீப் குமாருடன் நவாஸை பேச வைத்தார் வாஜ்பாய்: பாக். முன்னாள் அமைச்சர் புத்தகத்தில் தகவல்

கார்கில் போர் ஏற்பட்டபோது அமைதி ஏற்படுத்த பாலிவுட் நடிகர் திலீப் குமாருடன் நவாஸை பேச வைத்தார் வாஜ்பாய்: பாக். முன்னாள் அமைச்சர் புத்தகத்தில் தகவல்
Updated on
1 min read

‘‘கார்கில் போரின் போது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பாலிவுட் நடிகர் திலீப்குமாருடன் பேச வைத்தார் இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய்’’ என்று பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போர் ஏற்பட்டது. கார்கில் பகுதியில் அத்துமீறி ஆக்கிரமிப்பு நடத்திய பாகிஸ்தான் வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டி அடித்து கார்கிலை மீட்டனர். கார்கில் போரின் போது பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப், இந்திய பிரதமராக வாஜ்பாய் ஆகியோர் பதவி வகித்தனர். அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் குர்ஷித் கசூரி. இவர் தற்போது, ‘நெய்தர் எ ஹாக் நார் எ டவ்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளார்.

கார்கில் போரின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முதன்மை செயலராக இருந்தவர் சயீத் மெஹ்தி. இவர் ஒரு நாள் ஷெரீப்புடன் அமர்ந்திருந்த போது, தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இந்திய பிரதமர் வாஜ்பாய் பேசுவதாக தகவல் அளித்துவிட்டு இணைப்பு வழங்கப்பட்டது. பின்னர் ஷெரீப்பும் வாஜ்பாயும் பேசுகையில், கார்கிலில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவல் குறித்து ஷெரீப்பிடம் வாஜ்பாய் புகார் கூறியுள்ளார்.

அவர் சொன்னதை கேட்டு ஷெரீப் ஆச்சரியம் அடைந்துள் ளார். அதற்கு, ‘‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. எனினும், ராணுவ தலைமை தளபதி பர்வேஸ் முஷாரப்புடன் பேசிய பிறகு தங்களை தொடர்பு கொண்டு கண்டிப்பாக பேசுகிறேன்’’ என்று ஷெரீப் பதில் அளித்துள்ளார். இந்த உரையாடல் முடிவதற்கு முன்னர், எனக்கு அருகில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரிடம் பேச நீங்கள் விரும்புவீர்கள் என்று வாஜ்பாய் கூறியுள்ளார்.

வாஜ்பாய் குறிப்பிட்ட நபர் பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார். இவர் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். தொலைபேசியில் திலீப்குமாரின் குரலை கேட்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்துவிட்டார் ஷெரீப். (திலீப் குமாரின் உண்மையான பெயர் யூசுப் கான், பாகிஸ்தானில் உள்ள பெஷாவரைச் சேர்ந்தவர்.) அப்போது, ‘‘சாகேப், பாகிஸ்தான் - இந்தியா இடையே அமைதி ஏற்படுத்த நீங்கள் பெரும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். ஆனால், இதை (கார்கில் ஊடுருவல்) நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை’’ என்று திலீப் குமார் கூறியிருக்கிறார்.

இவ்வாறு குர்ஷித் கசூரி தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in