

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சிக்கல் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் சிரியா, இராக் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12,000 அகதிகளுக்கு தங்கள் நாட்டில் புகலிடம் அளிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் உறுதி செய்தார்.
அதேவேளையில் சிரியாவில் ஐ.எஸ். படைகள் மீது வான்வழித் தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என ஆஸ்திரேலியா உறுதிபட தெரிவித்துள்ளது.
கான்பராவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் டோனி அபோட், "சிரியா மற்றும் இராக்கிலிருந்து புலம்பெயர்ந்த 12,000 அகதிகளுக்கு ஆஸ்திரேலியா புகலிடம் அளிக்கும்.
மேலும், சிரியாவின் அண்டை நாடுகளில் அகதிகளாக வாழும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு உதவும் வகையில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும்.
மனித உயிர்களை துச்சமாக மதித்து கொலைகளை அரங்கேற்றும் ஐ.எஸ். ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம். அது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துக்குமான பாதுகாப்பாக அமையும்" என்றார்.