

தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடையை நீக்குமாறு அமெரிக்காவை கியூபா வலியுறுத்தி வரும் நிலையில், இரு நாட்டு அதிபர்களும் ஐ.நா. தலைமையகத்தில் சந்தித்துப் பேசினார்.
ஐ.நா. தலைமையகத்தில் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பில் கியூபா மீதான பொருளாதார தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நீண்டகாலமாக பகை நீடித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்கா தனது நிலையை மாற்றி கியூபாவுடன் தற்போது நட்புக் கரம் நீட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஹவானாவுக்கு பேருந்து போக்குவரத்தையும் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இரு நாட்டு தலைநகரங்களிலும் பரஸ்பரம் தூதரகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. மேலும் இரு நாடுகளுக்கிடையே நிலவும் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் கியூபா அமெரிக்கா விதித்த பொருளாதார தடை குறித்த பேச்சு மட்டும் இதுவரை நடக்கவில்லை.
இந்த நிலையில் இன்றைய சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காஸ்ட்ரோவிடம் ஒபாமா உறுதி அளித்திருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதில் பொருளாதார தடை குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கியூபா மீதான பொருளாதார தடையை நீக்க அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஐ.நா. பொதுசபையில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா மீதான பொருளாதார தடையை நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிப்பது தவிர்க்க முடியாதது என கூறியிருந்தார்.