Last Updated : 03 Sep, 2020 05:20 PM

 

Published : 03 Sep 2020 05:20 PM
Last Updated : 03 Sep 2020 05:20 PM

கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு 2-வது முறையாக தொற்று ஏற்படுமா?- என்ன சொல்கிறது உலக சுகாதார அமைப்பு

கரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டு குணமடைந்தபின், அவர் மீண்டும் கரோனாவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பது பெரும்பாலானவர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி.

கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்னும் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு வரவில்லை. இருப்பினும் ஒருவர் ஒருமுறை கரோனாவில் பாதிக்கப்பட்டால், அவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியும், மீண்டும் அவர் கரோனா வைரஸால் பாதிக்கப்படமாட்டார் என்று ஆய்வுகள் சொல்லப்பட்டன.

இந்தச் சூழலில்தான் ஹாங்காங்கில் ஒருமுறை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு 2-வது முறையாகவும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் இதேபோன்று பல்வேறு மாகாணங்களில் நடந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “ கரோனாவில் ஒருவர் பாதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டால் மீண்டும் வராது என்று நம்பினாலும், மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அடிக்கடி ஒருவருக்கு இது நேருமா எனத் தெரியாது.

ஹாங்காங்கில் 33 வயதான ஒருவர் கரோனாவில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், மீண்டும் பாதிக்கப்பட்டார் என்றால், முதல் முறையாக அவர் பாதிக்கப்பட்டபோது லேசான அறிகுறிகள் இருந்தன. ஆனால், 2-வது முறையாக பாதிக்கப்பட்டபோது அவருக்கு அறிகுறிகள் இல்லை.

ஒருவேளை அவரின் நோய் எதிர்ப்புச் சக்தி மண்டலம், தீவிரமான அறிகுறிகளுக்கு எதிராகச் சில பாதுகாப்புகளை உருவாக்கியதால் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மீண்டும் வருவதைத் தடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹாங்காங் விமான நிலையத்தில் பலருக்கும் கரோனா பரிசோதனை செய்தபோது, கரோனா இருக்கக்கூடிய பலரின் உடலில் இருக்கும் கரோனா வைரஸ் கிருமியை ஆய்வு செய்தபோது பல்வேறு கட்டமைப்புகளில் இருந்துள்ளது” எனத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், “கரோனாவில் ஒருவர் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் அவர் மீண்டும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை எனச் சொல்ல முடியாது. ஆனால், 2-வது முறையாக ஒருவர் பாதிக்கப்படும் சம்பவம் வழக்கமாக நடக்காது எனச் சொல்ல முடியும்.

பொதுவாக கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உடலில் சில நோய் எதிர்ப்புச் சக்திகள் உருவாகி, மீண்டும் தொற்று பாதிக்கப்படாமல் தடுக்கும். ஆனால், நோய் எதிர்ப்புச் சக்தி எந்த அளவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எத்தனை நாட்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் என்பதும் தெரியாது.

இதில் முக்கியமானது நோய் எதிர்ப்புச் சக்தி அதன் வீரியத்தன்மையை இழந்தால், தடுப்பு மருந்துக்குச் சவாலாக அமையக்கூடும். அந்த நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்படலாம்.

ஆதலால், ஒருமுறை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் தொற்று ஏற்படாது என்று சொல்வதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. மீண்டும் தொற்று ஏற்பட்டவரால், வைரஸ் பரவாது என்பதற்கும் ஆய்வு முடிவுகள் இல்லை.

ஆதலால், தொடர்ந்து முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், சுகாதாரமாக இருத்தலைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x