

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது மற்றும் புதுமையான சிந்தனைகளை முன்வைத்தது குறித்த சிந்தனையாளர்களின் பட்டியலை பிரிட்டன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது. 2.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டறிய உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது மற்றும் அவ்வைரஸ் குறித்து புதுமையான சிந்தனைகளை முன்வைத்த முதல் 50 பேர் பட்டியலை பிரிட்டனின் பிராஸ்பெக்ட் இதழ் (Prospect Magazine) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா முதல் இடம் பிடித்திருக்கிறார். இரண்டாவது இடம் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்குக் கிடைத்துள்ளது.
இந்தியாவில் முதலில் கேரளாவில்தான் கரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் கரோனா மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சமூக இடைவெளியை சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக கேரளாவில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கரோனா மட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பரவிய நிபா வைரஸைக் கட்டுப்படுத்துவதிலும் ஷைலஜா மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்றும் பிராஸ்பெக்ட் இதழ் (Prospect Magazine) குறிப்பிட்டுள்ளது.