

சர்ச்சைக்குள்ளான வகையில், இஸ்லாம் சார்ந்த கேலிச் சித்தரங்களை சார்லி ஹெப்டோ பத்திரிகை மீண்டும் பதிப்பித்துள்ளதற்கு தான் கண்டனம் தெரிவிக்க முடியாது என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பாரீஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்டபோது, அனைத்து இஸ்லாம் நாடுகளும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்தே சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
சார்லி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதலில் ஈடுபட்ட சையது கோச்சி மற்றும் செரீப் கோச்சி என்ற இருவர் பிரான்ஸ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்லாம் சார்ந்த கேலிச் சித்திரங்களை சார்லி ஹெப்டோ பத்திரிகை மீண்டும் பதிப்பித்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் மக்ரோனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மக்ரோன், “பத்திரிகைச் செய்தியின் தலையங்கம் குறித்து தான் கண்டனம் தெரிவிக்க முடியாது. ஏனென்றால் நம்மிடம் பத்திரிகை சுதந்திரம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மட்டும் இல்லாமல் பல மதங்கள் சார்ந்த சர்ச்சைக்குரிய கேலிச் சித்தரங்களை வெளியிடுவதை சார்லி ஹெப்டோ பத்திரிகை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அப்பத்திரிகை பரவலான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.