

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் சமூகத்தில் விரைவாக அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது என்பது கரோனா மூலம் நடக்கும் பேரழிவுக்கு வழிகாட்டுவதாக அமைந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.53 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 84.80 லட்சம் பேர் உயிரிழந்தனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பலநாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானன் கெப்ரியேசஸ் நேற்று ஜெனிவாவில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''சமூகத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நாடுகள் விரைவாகத் தளர்த்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. அதேபோல, கரோனா வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்துவது அவசியம்.
ஆனால், ஒருபுறம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களை இயல்பு வாழ்க்கை வாழ அனுமதித்துவிட்டு, மறுபுறம் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துகிறேன் என்று கூறினால், இரண்டுக்கும் சமநிலையை உண்டாக்க முடியாது.
சமூகத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களைச் சுதந்திரமாகச் செல்ல அனுமதிப்பது, கரோனா மூலம் வரும் பேரழிவுக்கு வழிகாட்டுவதற்கு இணையாகும்.
4 முக்கிய அம்சங்களை நாடுகள் முக்கியமாகப் பின்பற்ற வேண்டும். முதலாவதாக, சமூகங்களும், தனி நபர்களும், மொத்தமாகக் கூடும் நிகழ்ச்சிகளைத் தடுக்க வேண்டும், அங்குதான் வைரஸ் திரள் உருவாகும்.
இரண்டாவது, கரோனாவில் எளிதாகப் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை, வயதினரைப் பாதுகாக்க வேண்டும்.
மூன்றாவது, மக்கள் ஒவ்வொருவரும் சுயமாகத் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நான்காவது, கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது, பரிசோதனை செய்வது, கவனிப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். இவற்றைப் பின்பற்றுவது அவசியமாகும்.
உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பல்வேறு நாடுகளில் நடத்திய ஆய்வில் 90 சதவீதம் நாடுகள், கரோனா வைரஸ் காரணமாக, மற்ற சுகாதாரச் சேவைகளை நிறுத்திவிட்டன.
குறிப்பாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், ஊட்டச்சத்து மருந்துகள் அளித்தல் உள்ளிட்டவற்றை ஒத்திவைத்துள்ளன. 105 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 90 சதவீதம் நாடுகளில் குறிப்பாக குறைந்த, நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் இந்த நிலைதான் நீடிக்கிறது.
25 சதவீதத்துக்கும் மேலான நாடுகள், கரோனாவால் அவசரப் பணிகளுக்காகன பிற மருத்துவ சேவைகளை நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.
பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் என்னவிதமான வேறுபாடுகள் கொண்ட பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாடுகள் புரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்''.
இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.