

கரோனா பரவலுக்கு இடையே சவுதி அரேபியாவில் நூற்றுக்கான அப்பிரிக்க மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த சண்டே டெலிகிராம் செய்தித் தாள் வெளியிட்ட செய்தியில், “ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் கரோனா வைரஸுக்கு இடையே சவுதி அரேபியாவில் சிறிய அறை ஒன்றில் நான்கு மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
அதில் சிக்கிக் கொண்ட எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “ நாங்கள் நரகத்தில் இருக்கிறோம். நாங்கள் தினமும் மிருகங்கள் போல் நடத்தப்படுகிறோம். கடுமையாக தாக்கப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சவுதி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. சவுதி அரேபியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.