சீனா தாக்கினால் அமெரிக்காவின் உதவியை பெறுவோம்: பிலிப்பைன்ஸ்
தென் சீனக் கடலை சீனா தாக்கினால் அமெரிக்காவின் உதவியை பிலிப்பைன்ஸ் பெறும் என்று அந்நாடு மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை செயலாளர் தரப்பில், “தென் சீனக் கடல் எல்லைப் பகுதியில் எங்கள் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவின் உதவியை பெறுவோம். தென் சீனக் கடலில் ரோந்து பணிகளை பிலிப்பைன்ஸ் தொடரும். இதனை சட்ட விரோத நடவடிக்கை என்று சீனா கூறினாலும் பிலிப்பைன்ஸ் அதனை தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் சீனக் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி போர்ப் பயிற்சி மேற்கொண்டது, சீன ராணுவம், இதனை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என்று சீன ஊடகங்கள் வர்ணித்துள்ளன. இதனால் தென்சீனக் கடலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்கு பிலிப்பைன்ஸ் தற்போது பதில் அளித்துள்ளது.
அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் தென் சீன கடல் பகுதிக்கு அமெரிக்கா 2 போர்க் கப்பல்களை அனுப்பி ஜூலை மாதம் பயிற்சியில் ஈடுபட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் சீனா தற்போது இறங்கியுள்ளது.
