

தென் அமெரிக்க நாடானா சிலியில் 8.3 ரிக்டர் அலகு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். இந்த நிலநடுக்கத் தால் 8 பேர் உயிரிழந்தனர்.
சிலியின் வடக்குப் பகுதியில் புதன்கிழமை பின்னிரவு 8.3 ரிக்டர் அலகு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலாபெல் நகருக்கு அருகே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. இதன் அதிர்வுகள் தென்அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கு உணரப் பட்டன. கடலோர நகரங்களில் ஏற்பட்டுள்ள சேதத்தை அளவிடும் பணியில் அரசுத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பெரு, மற்றும் ஹாவாய் தீவுகளின் சில பகுதிகள், கலிபோர்னியாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிய அளவிலான பேரலைகள் கடலோரப் பகுதிகளைத் தாக்கின.
நியூஸிலாந்து வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கடலோர கிராமங்களில்வெள்ளம் புகுந்துள்ளது. கடலோர பகுதி களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மேட்டுப்பாங்கான பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இலாபெல் நகரில் சில கட்டிடங்கள் இடிந்துள் ளன. பலியான 8 பேரில் 2 பேர் பெண்கள். ஒரு நபரைக் காண வில்லை.
சிலி அதிபர் மிச்செலி பசெலெட் கூறும்போது, “மீண்டுமொருமுறை நாம் இயற்கையின் சக்திவாய்ந்த மோதலை எதிர்த்து செயல்பட வேண்டும். நிலைமை குறித்து அதிகாரிகள் முழுமையாக மதிப்பீடு செய்யும்வரை இடம்பெயர்ந்துள்ள மக்கள் மேடான பகுதியிலேயே தங்கியிருக்க வேண்டும்” என்றார்.
முதல் நில நடுக்கத்துக்குப் பிறகு, 7, 6 ரிக்டர் அலகுகளில் ஏராளமான நில நடுக்கங்கள் ஏற்பட்டன.