

வங்கதேசத்தில் அக்டோபர் 3 ஆம் தேதிவரை கல்வி நிலையங்கள் மூடப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கதேச கல்வித்துறை அமைச்சகம் கூறும்போது, “வங்கதேசத்தில் கரோனா பரவல் தொடங்கியதிலிருந்து மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 3 ஆம் தேதிவரை கல்வி நிலையங்கள் மூடப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக பல முக்கியத் தேர்வுகளையும் வங்கதேசம் தள்ளிப் போட்டுள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சிகள் மற்றும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
வங்கதேசத்தில் 3,08,925 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,200 பேர் பலியாகினர். 2 லட்சம் பேர்வரை குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.