

கமலா ஹாரிஸ் அதிபராக இருப்பதற்குத் தகுதி வாய்ந்தவர் அல்ல என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், “ஒரு பெண்ணை அமெரிக்க அதிபராகப் பார்ப்பதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். ஆனால், அப்பதவிக்கு வெள்ளை மாளிகையின் முதன்மைச் செயலாளர் இவான்கா ட்ரம்ப்தான் பொருத்தமாக இருப்பார்.
கமலா ஹாரிஸுக்கு அந்தப் பதவியில் அமரத் தகுதி இல்லை. கமலா, அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேறி விடுவார். ஏனெனில் அவர் எந்த வாக்குகளையும் பெற்றிருக்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோ பிடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா, சீனாவுக்குச் சொந்தமாகிவிடும். அமெரிக்க வேலைவாய்ப்புகள் சீனாவுக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.