

வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ தலைமையிலான ஆட்சி யைக் கவிழ்க்க வன்முறையைத் தூண்டிவிட்டு சதியில் ஈடுபட்ட தற்காக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் லியோபோல்டோ லோபஸுக்கு 13 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெனிசூலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. அப்போது ஆட்சிக் கவிழ்ப்பு சதிக் குற்றச்சாட்டின் காரணமாக லியோபோல்டோ லோபஸ் கைது செய்யப்பட்டு ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் லோபஸ்.
அவரை விடுவிக்கக் கோரி அவரின் ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிவில், லோபஸுக்கு 13 ஆண்டுகள் 9 மாதங்கள் 7 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வெனிசூலாவில் மக்களின் ஆதரவைப் பெற்ற அதிபராக இருந்த சாவேஸ் 2013-ம் ஆண்டு மரணமடைந்தார். அதன் பிறகு நிகோலஸ் மதுரோ அதிபர் பொறுப்பை ஏற்றார். அவரது ஆட்சியில் வெனிசூலாவில் கடும் குழப்பங்களும், போராட்டமும் ஏற்பட்டது.