Last Updated : 12 Sep, 2015 08:18 PM

 

Published : 12 Sep 2015 08:18 PM
Last Updated : 12 Sep 2015 08:18 PM

ஐநா போர்க்குற்ற விசாரணை அறிக்கை இலங்கை அரசிடம் ஒப்படைப்பு

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை அந்நாட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா நகரில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் (யுஎன்எச்ஆர்சி) 30-வது கூட்டத்தில் வெளியிடப்பட உள்ள இந்த அறிக்கையை வெள்ளிக்கிழமை இரவு பெற்றுக் கொண்டதாக வெளியுறவு அமைச்சக அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கை குறித்து அரசின் கருத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க 5 நாட்கள் தேவைப்படும் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. விசாரணை அறிக்கை மற்றும் அது தொடர்பான இலங்கை அரசின் பதில் அறிக்கை ஆகியவை இந்த மாத இறுதியில் யுஎன்எச்ஆர்சி-யிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஹர்ஷ் டி சில்வா கூறும்போது, “ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீரா மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னே உள்ளிட்டோர் ஜெனீவா நகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்” என்றார்.

இந்த அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ஜனவரி மாதத்தில் இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற மைதிரிபால சிறீசேனா கேட்டுக்கொண்டதற்கிணங்க நல்லெண்ண நடவடிக்கையாக செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் போர்க்குற்றம் புரிந்ததாக ஏற்கெனவே வெளியான யுஎன்எச்ஆர்சி-யின் விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என ராஜபக்ச தலைமையிலான அப்போதைய இலங்கை அரசு கூறியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x