

எரவான் ஆலயம் என்பது தாய்லாந்தில் மிகவும் பிரபலம். அதன் முக்கியக் கடவுள் ஓர் இந்துக் கடவுள்தான் பிரம்மா. பிரம்மாவை அங்கு ப்ராப்ரோன் என்கிறார்கள். சிறிய ஆலயம்.
ஆனால் அங்கு இரு வருடங்களுக்கு முன் சென்றிருந்தபோது வியப்பு ஏற்பட்டது. எக்கச்சக்கமான பக்தர்கள்.
அது ஒரு திறந்தவெளிக் கோயில். பக்கத்தில் பல உயர்ந்த கட்டிடங்கள். முக்கிய மாக, கிராண்ட் ஹையத் எரவான் ஹோட்டல். பாங்காக்கின் சிட்லோன் ரயில்வே நிலையத் துக்கு அருகில் அமைந்த பகுதி இது.
இந்த ஆலயம் உருவான கதை சுவையானது. 1956ல் அரசுக்குச் சொந்தமான எரவான் ஹோட்டல் இங்கே எழும்பத் தொடங்கியது. ஆனால் கட்டுமானம் தொடங்கியதிலிருந்து நிறைய பிரச்னைகள். எதிர்பார்த்ததைவிட செலவு மிக அதிகமாக கூடிக் கொண்டிருந்தது. அவ்வப்போது கட்டிடத் தொழிலாளர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
போதாக்குறைக்கு கட்டிடம் கட்டுவதற் காக கப்பலில் வரவழைக்கப்பட்டிருந்த சலவைக் கற்கள் மொத்தமும் மாயமாய் மறைந்து விட்டன. இதன் பின்னணியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய அரசு, ஒரு காரியத்தைச் செய்தது. அது ஜோதிடர் ஒருவரை ஆலோசித்ததுதான். அந்த ஜோதிடர் எரவான் ஹோட்டல் அமைய உள்ள பகுதியின் அக்கால ‘முக்கியத்துவத்தை’ நினைவு கூர்ந்தார்.
குற்றவாளிகளை அங்கே பொது மக்கள் பார்வைக்குக் காட்டுவது வழக்கமாம். ‘‘ஹோட்டல் உருவாவதைத் தடுக்கும் தீய சக்திகளுக்கு எதிராக ஓர் ஆலயத்தை பக்கத்தில் எழுப்புங்கள். அது பிரம்மாவுக்கான கோயிலாக இருக்கட்டும்’’ என்றார்.
இதன்படி ஆலயம் அமைக்கும் பணிகள் துவங்கின. அதன் பிறகு எந்தத் தடையும் இல்லாமல் ஹோட்டல் கட்டுமானம் மளமளவென முன்னேறியது.
எரவான் ஆலயம் மிக முக்கியமான ஓர் வணிகத் தெருவில் இருப்பதால், அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
ஒரு கட்டத்தில் எரவான் ஹோட்டல் முழுவதுமாக இல்லாமல் போனது. ஆனால் யாரும் எரவான் கோயிலின் மகிமையைக் குறைத்து மதிப்பிடவில்லை. காரணம் ஹோட்டல் கட்டிடத்திற்கு தானாக எந்த சிக்கலும் நேரவில்லை. அது இடிக்கப்பட்டு இன்று மேலும் நவீன வசதிகள் கொண்ட கிராண்ட் ஹையத் எரவான் ஹோட்டலாக மாறியுள்ளது.
நான்கு முகங்கள், ஆறு கரங்கள் என்று கம்பீரமாகக் காட்சி அளிக்கும் இந்த பிரம்மன் சிலைக்கு 2006ல் ஒரு விபரீதம் நேர்ந்தது. கையில் கத்தியோடு வந்த ஒருவன் இந்தச் சிலையை உடைத்தான். தெருவில் இருந்த சிலர் அங்கு பாய்ந்து வந்து குற்றவாளியைப் பிடிப்பதற்குள், சிலை கிட்டத்தட்ட முழுவதுமாக உடைந்து விட்டது.
எதற்காக உடைத்தான்? பின்னணியில் இருந்தது மாற்று மதமா? தீவிரவாதமா? இல்லை. அவன் ஒரு மனநோயாளி. எரவான் தெய்வத்தின்மீது பெரும் பற்று கொண்டிருந்த, சாலையில் சென்ற கொண்டிருந்த சிலர் அவனைத் தாறுமாறாகத் தாக்க, அவன் இறந்தே விட்டான்.
ஆலயம் பொது மக்கள் பார்வைக்கு சில நாட்கள் மூடப்பட்டது. கடும் எதிர்ப்பு. அவசர அவசரமாக புதிய பிரம்மன் சிலை உருவாக்கப்பட்டு அங்கே வைக்கப்பட்டது. தங்கம், வெண்கலம் மற்றும் அரிதான உலோகங்களால் இவற்றோடு பழைய சிலையின் பகுதிகளும் கலந்து இந்தச் சிலை காணப்படுகிறது.
(பின்னர் நடைபெற்ற ஆராய்ச்சியில் இறந்தவனின் முதுகிலும், கைகளிலும் அராபிக் எழுத்துகளால் பச்சை குத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் நடைபெற, ‘‘கடந்த வருடங்களில் என் மகன் மனநல சிகிச்சை எடுத்து வருகிறான். இன்னது செய்கிறோம் என்று தெரியாமலேயே அவன் சிலையை உடைத்திருக்கிறான். அதற்காக அவனை அடித்துக் கொன்றது அநியாயம்’’ என்றார் அவன் தந்தை).
ஆக எரவான் ஆலயம் மீண்டும் பக்தர்களால் ஈர்க்கப்பட்டது. புத்தமதத்தி னரும் இங்கு எக்கச்சக்கமாக வருவதுண்டு. நாம் சென்றிருந்தபோது ஆலயத்தைச் சுற்றியுள்ள இடத்தில் ஒரு நடனக்குழு தாய்லாந்துக்கே உரிய கண்கவரும் ஆடை களுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். கேட்டபோது அது ஒருவகை வேண்டுதலாம். குறிப்பிட்ட தொகையை ஆலய நிர்வாகத்திடம் செலுத்தினால் இந்த நடனத்தை ஏற்பாடு செய்வார்களாம்.
All is well என்று போய்க் கொண்டிருந்த போது படைக்கும் கடவுளின் உருவத்துக்கு ஏற்பட்டது மற்றொரு ஆபத்து.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று அங்கு குண்டு வீசப்பட்டது. நூற்றுக்கணக் கானவர்கள் பலியாயினர்.
தாய்லாந்து திகைத்து நிற்கிறது. நாம் மும்பையிலும், பெரும்புதூரிலும் அனுபவித்திருக்கிறோம். ஆனால் தாய்லாந்துக்கு வெடிகுண்டு ‘கலாச்சாரம்’ புதிது. தாய்லாந்து மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
(உலகம் உருளும்)