

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 45 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் புதன்கிழமை கூறும்போது, “ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாகாணங்கள் நீரில் முழ்கிவிட்டன. 45 பேர் பலியாகினர். 80 பேர் காயமடைந்தனர்.
பல இடங்களில் வீடுகள் சரிந்துள்ளதால், பலர் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்திற்குப் பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பால்க் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் பொதுமக்கள் 10க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தலிபான்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ்
ஆப்கானிஸ்தானில் 37 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 1,387 பேர் பலியாகி உள்ளனர்.