போலியோ இல்லாத ஆப்பிரிக்கா: உலக சுகாதார அமைப்பு தகவல்

போலியோ இல்லாத ஆப்பிரிக்கா: உலக சுகாதார அமைப்பு தகவல்
Updated on
1 min read

போலியோவை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறும்போது, “இன்று ஆப்பிரிக்காவின் வரலாற்றில் சிறப்புமிக்க நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் போலியோ பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. போலியோவிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட பெரியம்மையுடன் போலியோவும் தற்போது இணைகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு போலியோவுக்கு மருந்து கிடைக்குவரை இந்த நோய் உலகம் முழுவதும் பரவலாக இருந்தது. இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ஏழை நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பு போலியோவுக்கு எதிராக தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டது.

அப்போது உலகம் முழுவதும் 3,50,000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 70,000 பேர் ஆப்பிரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இளம்பிள்ளைவாதத்தை ஏற்படுத்தும் போலியோ வைரஸ் பரவுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் கவலைப்படும்படியான வகையில், இந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தது.

டைப்-1 என்றழைக்கப்படும் போலியோ வைரஸ் பற்றியது இந்த எச்சரிக்கை. 2018-ல் 28 பேருக்குத்தான் போலியோ அறிகுறி தென்பட்டது. ஆனால், 2019-ல் இந்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துவிட்டது. பாகிஸ்தானில் மட்டும் 128 பேரிடம் போலியோ வைரஸ் டைப்-1 கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் 28 பேருக்கு இருப்பது தெரிந்தது.

பாகிஸ்தானிலிருந்து ஈரான், ஆப்கானிஸ்தானுக்கு இந்த வைரஸ் கடத்தப்பட்டிருப்பதும் ஆய்வுகளிலிருந்து தெரிகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் சுற்றுப்புறங்களிலும் இந்த வைரஸ்கள் தற்போது பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in