பயங்கர லாரா பெரும்புயல்: 5  லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற உத்தரவு- ஆபத்தில் டெக்ஸாஸ், லூசியானா

லாரா புயலின் சாட்டிலைட் படம்.
லாரா புயலின் சாட்டிலைட் படம்.
Updated on
2 min read

அமெரிக்காவை கரோனா உலுக்கி வரும் இந்தக் காலக்கட்டத்தில் பெரும்புயல் லாரா தனது கோர முகத்தைக் காட்ட தயாராகி வருகிறது. அமெரிக்காவின் கல்ஃப் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் டெக்ஸாஸ் மற்றும் லூசியானாவை பயங்கர சூறாவளிக் காற்று தாக்குவதோடு கடும் வெள்ள அபாயமும் ராட்சத அலைகள் காரணமாக கடல்நீர் சில மைல்கள் ஊருக்குள் புகும் என்றும் வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தின் பியுமோண்ட், கால்வெஸ்தன், போர்ட் ஆர்தர், நகர்களிலிருந்து 3,85,000 பேர் வெளியேறஅறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென்மேற்கு லூசியானாவின் கேல்கசியு பாரிஷிலிருந்து சுமார் 2 லட்சம் பேர் வெளியேறுகின்றனர்.

லாரா பெரும்புயல் 3ம் எண் எச்சரிக்கை நிலை புயலாகும். புதனன்று கரையைக் கடக்கும் போது மணிக்கு 185 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 அடிக்கு அலைகள் உயரம் எழும் ஆபத்து இருப்பதால் ஊருக்குள் பலமைல்கள் கடல் நீர் புகும் ஆபத்து உள்ளது.

தேசிய புயல் மைய உதவி இயக்குநர் ரேப்பபோர்ட் கூறும்போது, “கடல்நீர் உஷ்ணமடைந்ததால் இது 3ம் நிலை அதி தீவிர புயலாகியுள்ளது. கல்ஃப் கோஸ்ட் பகுதியை அது அடையும் வரை அதன் வழிநெடுக கடல் நீர் உஷ்ணமாகியுள்ளதால், இது பெரும்புயலாக உருமாறியுள்ளது” என்றார்.

15 ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் சேதங்களை ஏற்படுத்திய ரீட்டா புயல் போல் இது உள்ளதாக லூசியானா கவர்னர் கூறுகிறார்.

இன்று நண்பகல் முதலே லாரா புயலின் கடும் தாக்கத்தை லூசியானா, டெக்ஸாஸ் மக்கள் உணர்வார்கள் எனவே உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செவ்வாய் மாலை நிலவரங்களின் படி லேக் சார்லஸுக்கு 700 கிமீ தொலைவில் லாரா புயல் மையம் கொண்டிருக்கிறது. இது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 28 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. கியூபா, இஸ்பானியோலா, டொமினிக் ரிபப்ளிக், ஹைதீயில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி தற்போது லூசியானா, டெக்சாஸ் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in