

அமெரிக்க தபால் துறையின் சார்பில் சிறப்பு தபால்தலையை வெளியிட ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுத உள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை நியூயார்க்கில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரஞ்ஜூ - ரவி பாத்ரா தம்பதியினர் சந்தித்தனர்.
இவர்கள் அமெரிக்க தபால்துறையின் சார்பில் தீபாவளி தபால் தலை வெளியிட கோரி பல ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருவதையும் இதற்காக அமெரிக்க நடாளுமன்ற உறுப்பினர் கார்லியன் மலோனேயியுடன் இணைந்து செயல்படுவதையும் மோடியிடம் தெரிவித்தனர்.
அமெரிக்க தபால் துறை சேவை மூலம் தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிட ஒபாமாவை வற்புறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை, ரஞ்ஜூ சந்திப்பின் போது கேட்டுக்கொண்டார்.
அப்போது, தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிட கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நான் கடிதம் மூலம் கோரிக்கை வைப்பேன் என்று பிரதமர் மோடி ரஞ்ஜூவிடம் கூறியதாக பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.