Last Updated : 25 Aug, 2020 01:36 PM

 

Published : 25 Aug 2020 01:36 PM
Last Updated : 25 Aug 2020 01:36 PM

கரோனா வைரஸால் கடந்த 5 மாதங்களில் உலக சுற்றுலாத் துறைக்கு ரூ.24 லட்சம் கோடி இழப்பு: ஐ.நா. தகவல்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் கடந்த 5 மாதங்களில் உலக சுற்றுலாத் துறை ஏற்றுமதியில் 32,000 கோடி அமெரிக்க டாலர் (ரூ.24 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 5 மாதங்களாக உலகின் பல்வேறு நாடுகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. மக்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டும், இன்னுயிரை இழந்தும் பெரிய துன்பங்களுக்கு ஆளாகினர். கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளில் கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தால், அந்தந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி முடங்கிப்போனது.

தொழில்கள், வர்த்தகம், சிறு வியாபாரம், சிறு, குறுந்தொழில்கள் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளன. இதில் அதிக வருமானத்தைத் தரக்கூடிய சுற்றுலாத் துறையும் ஊரடங்கால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வருமானத்தையே பெரும்பகுதி நம்பியிருக்கும் நாடுகளில் கரோனாவால் மிக மோசமான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுவரை உலக அளவில் கரோனாவில் 2.37 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 81.30 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் கொள்கை விளக்கக் கூட்டத்தில் நேற்று பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''உலகப் பொருளதாாரத்தில் ஏற்றுமதித் துறையில் எரிபொருள், ரசாயனம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் வருமானத்தைத் தரக்கூடிய சுற்றுலாத்துறைதான். கடந்த 2019-ம் ஆண்டில் உலக வர்த்தகத்தில் 7 சதவீதம் சுற்றுலாத் துறைதான்.

இந்த பூமியில் வசிக்கும் மக்களில் ஒவ்வொரு 10 பேருக்கும் வாழ்வாதாரத்தை அளிப்பது சுற்றுலாத் துறை, உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் சுற்றுலாத் துறையை நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு நாடுகளின் கலாச்சாரம், நாகரிகம், உணவு முறை, பழக்கங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யவும், உலக மக்களை ஒருவரோடு ஒருவராக நெருக்கமாகப் பழகச் செய்யவும் சுற்றுலாத் துறைதான் காரணமாக இருக்கிறது.

ஆனால், இந்த ஆண்டில் கரோனா வைரஸ் தொற்றால், உலக சுற்றுலாத் துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து போன்றவை முடங்கியதால், சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் பல்வேறு நாடுகளுக்கு பயணிகள் செல்வதைத் தவிர்த்துவிட்டனர். இதனால் அந்தந்த நாடுகளில் வருவாய் வழக்கமானதைவிட பாதியாகக் குறைந்துவிட்டது.

அதிலும் பணக்கார நாடுகளுக்கு சுற்றுலாத் துறை பாதிப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால், வளர்ந்துவரும் நாடுகளுக்கு, குறிப்பாக சிறிய தீவுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இது அவசரக் காலம். சுற்றுலா வருவாய் என்பது பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் 20 சதவீதத்துக்கும் அதிகமாகக் கூட இருந்து வருகிறது.

கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை உலகச் சுற்றுலாவில் 32,000 கோடி டாலர் (ரூ.24 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் 1.20 லட்சம் கோடி டாலராக சுற்றுலா வருமானம் இருக்கும் எனக் கணக்கிடப்பட்ட நிலையில், அது 91,000 கோடி டாலராகக் குறையும் என எதிர்பார்க்கிறோம். உலக அளவில் பொருளாதார வளர்ச்சியும் 2.8 சதவீதத்திலிருந்து 1.50 சதவீதமாகக் குறையும்''.

இவ்வாறு குட்டரெஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x