பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என மிரட்டல் விடுத்த பிரேசில் அதிபர்

பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என மிரட்டல் விடுத்த பிரேசில் அதிபர்
Updated on
1 min read

தனது மனைவியின் வங்கிக் கணக்குகள் குறித்துக் கேட்ட பத்திகையாளரின் முகத்தில் குத்துவேன் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மிரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பதவி ஏற்றது முதலே, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவரை போல்சனாரோ மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2011 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கு இடையில், ஜெய்ர் போல்சனாரோவின் மனைவி, மைக்கேல் போல்சனாரோவின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து குளோபா பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குளோபோ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், பிரேசில் அதிபரிடம் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரத்தை கேள்வியாகக் கேட்டார்.

இதனால் கோபம் அடைந்த ஜெய்ர் போல்சனாரோ, ''உங்கள் முகத்தில் குத்த விரும்புகிறேன். அது சரிதானே?'' என்று கேட்டார்.

இதற்கு சக பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, ஜெய்ர் போல்சனாரோ அங்கிருந்து வெளியேறினார். இந்த ஆடியோவை குளோபா பத்திரிகை வெளியிட்டுள்ளது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஜெய்ர் போல்சனாரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார், முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவத் தயார் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதனை பிரேசில் அதிபர் நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in