Last Updated : 23 Aug, 2020 07:49 AM

 

Published : 23 Aug 2020 07:49 AM
Last Updated : 23 Aug 2020 07:49 AM

தாவுத் இப்ராஹிம் கராச்சியில்தான் இருக்கிறார்: முதல்முறையாக ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்;88 தீவிரவாதிகள், அமைப்புகளுக்குத் தடை

சர்வதேச தீவிரவாதி தாவுத் இப்ராஹிம் : கோப்புப்படம்

இஸ்லாமாபாத்

கடந்த 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வரும் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என முதல்முறையாக அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது. 88 தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதிப்பரிமாற்ற தடை விதித்து பாகிஸ்தான் விடுத்த அறிவிப்பில் தாவுத் இப்ராஹிம் பெயரும் இடம் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் பாகிஸ்தான் தங்கள்நாட்டில்தான் தாவுத் இப்ராஹிம் இருக்கிறார் என ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசு சார்பில் எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிவிப்பும் இல்லை.

பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிடும் செய்தி உண்மையானது என்றால், முதல்முறையாக தாவுத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இருக்கிறார் என பாகிஸ்தான் ஒப்புக்கொள்வதாகக் கருதப்படும்.

கடந்த 27 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தாவுத் இப்ராஹிம் கராச்சியில்தான் இருக்கிறார் என இந்திய அரசு தொடர்ந்து ஆதாரங்களுடன் கூறி வந்தது, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியது.

ஆனால், தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இல்லை என தொடர்ந்து அந்நாடு மறுத்து வந்தது. ஆனால், இப்போது வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

பாரீஸைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு எதிரான நிதிஉதவி தடுப்புகுழு கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் வைத்தது. தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதிஉதவி செல்வதைத் தடுக்காவிட்டால், அவர்களுக்கு விதிக்காவிட்டால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவ வேண்டியது இருக்கும்.

அதற்கு தேவையான நடவடிக்கையை 2019ம் ஆண்டு இறுதிக்குள் எடுக்க கெடு விதி்த்திருந்தது. ஆனால், கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இந்த சூழலில் பாகிஸ்தான் அரசு 88 தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு கடுமையான நிதிப் பரிமாற்றத் தடையை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 18-ம் தேதி இரு அறிவிப்புகளாக இந்த தடை உத்தரவை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளது.

மசூத் அசார், ஹபிஸ் சயீத், தாவுத் இப்ராஹிம் : கோப்புப்படம்

இந்த தடை உத்தரவில் ஹபிஸ் சயீத், மசூத் அசார், தாவுத் இப்ராஹிம் உள்ளிட்டோரின் பெயர்களும் அவர்களின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகமான நி நியூஸ் தெரிவி்த்துள்ளது. இதில் தாவுத் இப்ராஹிம் கராச்சியில் வசித்து வருவதற்கான முகவரியையும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டதற்கும், 700 பேர் காயமடைந்ததற்கும் மூளையாகச் செயல்பட்ட தாவுத் இப்ராஹிம் சொத்துக்குளும் முடக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் இருக்கிறது.

இதன் மூலம் அந்நாட்டில்தான் தாவுத் இப்ராஹிம் இருப்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டிருக்கிறது. கடந்த 2003-ம் ஆண்டு தாவுத் இப்ராஹிமை சர்வதேச தீவிரவாதி எனவும் அறிவித்திருந்தது.

கடந்த 18-ம் தேதி பாகிஸ்தான் பிறப்பித்த தடை உத்தரவில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் சயீத், ஜெய்ஷ் இ முகமது தலைவர் அசார், தலிபான், தேஷ், ஹக்கானி குரூப், அல்கொய்தா, தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள், தீவிரவாதிகளின் சொத்துக்கள், வீடுகள், வங்கிக்கணக்குகள் போன்றவை முடக்கப்பட்டுள்ளன.

இவர்கள் எந்த விதமான பரிமாற்றத்தையும் வங்கி மூலமாக செய்ய முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக, சயீத், மசூத் அசார், முல்லா பஸுல்லா, ஜாகியுர் ரஹ்மான் லக்வி, முகமது யாயா முஜாஹித், அப்துல் ஹக்கிம் முராத், இன்டர்போலால் தேடப்படும் நூர் வாலி மசூத், உஸ்பெகிஸ்தான் புரட்சி இயக்கி பஸல் ரஹீம் ஷா, தலிபான் தலைவர்கள் ஜலாலுதீன் ஹக்கானி,கலில் அகமது ஹக்கானி,யாயா ஹக்கானி,இப்ராஹிம் ஆகியோரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ ஜான்வி, தாரீக் கீதர் குரூப், ஹர்கத்துல் முஜாகிதீன், அல் ரசீத் அறக்கட்டஅஅளை, அல் அக்தர் அறக்கட்டளை, தான்ஜிம் ஜெய்ஷ் இ முகாஜிரீன் அன்சர், ஜமாத் உல் அஹ்ரர், தான்ஜிம் குத்பா இமாம் புஹாரி, ரபிதா அறக்கட்டளை, பாகிஸ்தானிய இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சி, அல் ஹமாமெயின் அறக்கட்டளை, ஹர்கத் ஜிகாத் அல் இஸ்லாமி, இஸ்லாமி ஜிகாத் குரூப், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமி தெஹ்ரீக், தேஸ் ஆப் ஈராக், எமிரேட்ஸ் ஆப் தான்ஜிம் குவாப்ஸ் , அப்துல், ஹக் ஆகிய தீவிரவாதி அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக நாளேடு செய்தி தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x