Last Updated : 22 Aug, 2020 10:04 AM

 

Published : 22 Aug 2020 10:04 AM
Last Updated : 22 Aug 2020 10:04 AM

ஸ்பானிஷ் ப்ளூ போல் நீடிக்காது: கரோனா வைரஸை 2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும்: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை


கடந்த 1918-ம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல் போல் கரோனா வைரஸ் நீடிக்காது, இப்போது இருக்கும் தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவற்றால் 2 ஆண்டுகளுக்குள்ளாகவே கரோனா வைரஸை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1918 ஸ்பானிஷ் ப்ளூ என்றால் என்ன?

கடந்த 1918-ம் ஆண்டில் உலகையே உலுக்கியது ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல். ஹெ1என்1 இன்ப்ளூயன்ஸா ஏ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் 1918 பிப்ரவரி முதல் 1920 ஏப்ரல் வரை உலகையே உலுக்கி எடுத்தது.

உலகம் முழுவதும் இந்த வைரஸால் 50 கோடி பேர்பாதிக்கப்பட்டனர். அதாவது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதி பாதிக்கப்பட்டனர்.

1.70 கோடி முதல் 5 கோடிவரை மக்கள் உயிரிழந்தனர் என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன. மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் மோசமான தொற்று என்று இன்றளவும் அஞ்சப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்ற அச்சத்தை ஏற்படுத்தி இருப்பது சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ். உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 2.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பு மருந்துகள் தீவிரமான மருத்துவப் பரிசோதனையில் இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மருந்து மனிதர்களுக்கு கிடைத்துவிடும் என நம்பப்படுகிறது.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் என்பது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினையாகும். கடந்த 1918-ம் ஆண்டில் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் பரவிய வேகத்தைவிட, இந்த கரோனா வைரஸ் தொற்றை வேகமாக பரவுவதற்கு உலகமயமாக்கல், நெருங்கியதொடர்பு, போக்குவரத்து ஆகியவை அனுமதித்துவிட்டன.

ஆனால், ஸ்பானிஷ் ப்ளூ பரவியபோது குறைந்த அளவு தொழில்நுட்பம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் மட்டுமே இருந்ததால், அதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முடியவில்லை.

ஆனால், கரோனா வைரஸை அப்படி நாம்விடவில்லை. நவீன தொழில்நுட்பம், மருத்துவக்கண்டுபிடிப்புகளால், 2 ஆண்டுகளுக்குள்ளாகவே கரோனா வைரஸை நாம் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியும் என நான் நம்புகிறேன்.

குறிப்பாக அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சி இருந்தால் நிச்சயம் சாத்தியமாகும்” இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவு தலைமை மருத்துவர் மைக்கேல் ராயன் கூறுகையில் “ 1918-ம் ஆண்டில் பரவிய ஸ்பானிஷ் ப்ளூ பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தியது, 3 கட்ட அலைகளாகப் பரவியது.

அதிலும் 2-ம் கட்ட அலை உலகில் மிகமோசமான உயிர்சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதுபோன்று கரோனா வைரஸில் ஏற்படவில்லை. ஆனால், அனைத்து வைரஸும் ஒரேமாதிரியான அலைகளை ஏற்படுத்துவதில்லை.

வைரஸை நாம் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், அது மேலே எழும்பிவிடும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x