

எங்களுக்கு எதிராக ஐ. நா. விடம் பொருளாதாரத் தடைகளை மீட்டெடுக்க கோருவதற்கு அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அக்கடித்தத்தில் ஈரான் தரப்பில், “ ஈரானுக்கு எதிராக ஐ.நா பொருளாதாரத் தடைகளை மீட்டெடுக்கக் கோருவதற்கு அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை. 2018 ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்ததிலிருந்து அமெரிக்கா வெளியேறியதோ அன்றே அமெரிக்கா அந்த உரிமையை இழந்துவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அமெரிக்கா அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாலும் ஈரான் மீது நடவடிக்கை கோர அனைத்து உரிமையும் உண்டு என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு தற்போது ஈரான் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே 2018 முதல் மீண்டும் போர்ச் சூழல் மூண்டுவந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகனைத் தாக்குதல் நடத்தி கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்நிலையில் மீண்டும் இவ்விரு நாடுகள் மோதி வருகின்றன.