

சுற்றுச்சூழல் ரீதியாக உலகின் பருவநிலை மாற்றங்களைத் தீர்மானிக்கும் கிரீன்லேண்டில் 2019ம் ஆண்டில் மட்டும் 586 பில்லியன் டன் பனி உருகித் தீர்த்துள்ளது. அதாவது கலிபோர்னியா அளவுள்ள மாகாணத்தை 4 அடி உயரத்துக்கு நீரால் சூழும் அளவுக்கு இந்தப் பனி உருகல் அளவு கணக்கிடப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு கோடைக்காலத்தில் பனி உருகும் அளவு குறைவாக இருந்த காலம் போக 2019-ல் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் விதமாக 586 பில்லியன் டன்கள், அதாவது 140 ட்ரில்லியன் கேலன்கள் (532 ட்ரில்லியன் லிட்டர்கள் தண்ணீர்) அளவுக்கு பெரிய அளவில் பனி உருகியுள்ளதாக சாட்டிலைட் படங்களை வைத்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆண்டு சராசரி 259 பில்லியன் டன் உருகல் என்பதையும் கடந்த பெரும்பனி உருகலாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2012-ல் கிரீன்லாந்தில் 511 பில்லியன் டன் அளவுக்கு பனி உருகியது.
பனி உருவாக எத்தனையோ ஆண்டுகள் எடுக்கிறது, ஆனால் உருகுவது வெகுவேகமாக நடைபெறுவதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 586 பில்லியன் டன் பனி உருகியதில் உலக அளவில் கடல்களில் நீர்மட்டம் 1.5 மி.மீ அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய அளவிலான, நினைத்துப் பார்க்க முடியாத கடல்நீர்மட்ட அதிகரிப்பாகும் என்கிறார் நாஸாவின் ஆய்வாளர் அலெக்ஸ் கார்டனர்.
2 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கூட கிரீன்லாந்து பனிப்படலம் சராசரியாக 108 பில்லியன் டன்கள் உருகின. ஆனால் 2019-ல் திடீரென இத்தகைய அதிகரிப்பு பேராபத்தின் அறிகுறி என்கிறார் கார்டனர். அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து உஷ்ணக் காற்று பெரிய அளவில் கிரீன்லாந்திற்கு வந்து இந்தப் பனி உருகலை முடுக்கி விட்டுள்ளது.
1991-லிருந்து கிரீன்லாந்தில் வெப்பநிலை 1.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2019-ம் ஆண்டின் கிரீன்லாந்து பனி உருகல் கவலையளிப்பதான ஒரு விஷயம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.