

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், ‘நாம் சுவர் எழுப்புவோம்’ என்ற பெயரில் பெரிய சுவர் எழுப்பும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ‘ஏப்பம்’ விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் பேனன் கைது செய்யப்பட்டார்.
இதில் 25 மில்லியன் டாலர்கள் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. மேன்ஹட்டன் நீதிமன்றத்தில் இவர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
ஸ்டீபன் பேனன் 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் மூளையாகச் ச்செயல்பட்டவர். இவரும் காயமடைந்த முன்னாள் விமானப்படை வீரர் ஒருவரும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப மக்களிடம் வசூல் வேட்டை நடத்தினர்.
25 மில்லியன் டாலர்கள் வசூல் ஆனதில் சுமார் 1 மில்லியன் டாலர்களை பேனன் தன் சொந்தச் செலவுகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.
தான் பெரிய மக்கள் தலைவன் என்பது போன்று தன்னைக் காட்டிக் கொள்ளும் பேனன், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்தான்.
இவருக்கு சீன கோடீஸ்வரர் குவோ வெங்குயி என்பவரது 35 மில்லியன் டாலர் பெறுமான படகு ஒன்றில் வைத்து பேனனை சட்ட அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
படகில் ரெய்டு நடத்தப்பட்ட போது பேனன் காஃபி அருந்திக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். 2வது முறையாக ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு வாரம் முன்னதாக இந்த கைதேர்ந்த அரசியல் உத்தி வகுப்பாளரான பேனன் கைது செய்யப்பட்டது ட்ரம்ப்பின் அதிபர் தேர்தல் வெற்றி வாய்ப்பை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
ஸ்டீபன் பேனன் முதன் முதலாக பிரபலமடைந்தது வலது சாரி ஊடகமான பிரெய்ட்பார்ட்டில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இவர் ஆல்ட்ரைட் என்ற வெள்ளையின மேட்டிமை குழுவுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த அமைப்பு வெள்ளை அடையாளங்களை தூக்கிப் பிடித்து வரும் குழுவாகும்.
ட்ரம்ப் நிர்வாகத்தில் ஆரம்ப காலக்கட்டங்களில் மிகவும் அதிகாரம் மிக்க நபராக பேனன் வளையவந்தார். 2017-ல் இவர் ட்ரம்ப் ஆலோசனைக் குழுவிலிருந்து வெளியேறினார்.
இப்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார். இதோடு குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ட்ரம்ப் நிர்வாகிகளில் ஸ்டீபன் பேனன் 7வது நபர். ட்ரம்ப்பின் முன்னாள் பிரச்சார மேலாளர் பால் மேனஃபோர்ட், ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் டி.பிளின், ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் டி. கோஹன் போன்ற பெருந்தலைகள் இதற்கு முன்னால் குற்ற வழக்கில் சிக்கியுள்ளனர்.
இந்த வழக்கில் ஆஜராகும் அமெரிக்க அட்டர்னி ஆட்ரி ஸ்ட்ராஸுக்கு இது அரசியல் ரீதியாக பெரும் சவாலாக இருக்கும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏனெனில் இதே மேன்ஹட்டன் அட்டர்னியாக செயல்பட்ட ஜெஃப்ரி எஸ்.பெர்மன் என்பவரை ட்ரம்ப் ஜூன் மாதம் வெளியேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.