வட கொரியாவில் உணவு பற்றாக்குறையை சமாளிக்க திட்டம்: வளர்ப்பு நாய்களை ஒப்படைக்க அதிபர் கிம் உத்தரவு

வட கொரியாவில் உணவு பற்றாக்குறையை சமாளிக்க திட்டம்: வளர்ப்பு நாய்களை ஒப்படைக்க அதிபர் கிம் உத்தரவு
Updated on
1 min read

நாய் இறைச்சி அற்புதமான உணவு என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும் செல்லப் பிராணியான நாய்களை கொன்று அதை இறைச்சியாக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவில் உள்ள 2.55 கோடி மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. உணவு பற்றாக்குறை பிரச்சினை காரணமாக நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் உணவு பற்றாக்குறை குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை ஒப்படைக்க வேண்டுமென கிம் ஜாங் உன் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாயின.

இதை தொடர்ந்து அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து, அவற்றை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பறிமுதல் செய்யப்படும் நாய்களில் சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்கா அல்லது இறைச்சி உணவகங்களுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

வடகொரியா அணு ஆயுத தயாரிப்பு நாடு என்பதால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் 1990-களின் மத்தியில் உணவுப் பஞ்சத்துக்கு மட்டும் 30 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது மீண்டும் அங்கே உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் செல்லப் பிராணிகளை ஒப்படைக்குமாறு அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாய் இறைச்சியை அருமையான உணவு என்றும், அது பாரம்பரியமான எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தருகிறது என்றும் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். எனவே நாய்களை கொன்று அதை இறைச்சிக்காக தருமாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் கோழி, மாடு, பன்றி இறைச்சியை விட அதிக வைட்டமின்கள் நாய் இறைச்சியில் இருப்பதாகவும் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மனித உடலில் உள்ள குடலுக்கு நாய் இறைச்சி அதிக நன்மையைத் தருவதாகவும் கிம் குறிப்பிட்டுள்ளார்.

கிம் ஜாங் உன்னின் அறிவிப்பு ஒரு பக்கம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், சிலர் நாய் இறைச்சியை விரும்பி சாப்பிடுகின்றனர். அதை சுவையான இறைச்சி என்றும் அழைக்கின்றனர். மேலும் நாய் இறைச்சியை அதிகம் சாப்பிடுமாறு அவர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

வட கொரியாவில் நாய் இறைச்சி உணவு என்பது மிகவும் பிரபலமான உணவு வகையாகவும் கருதப்படுகிறது. ஆனால் செல்லப் பிராணிகளை அடித்துக் கொன்று அதை இறைச்சியாக்குவதுதான் வேதனை என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் வட கொரியாவின் அண்டை நாடான, தென் கொரியாவில் செல்லப் பிராணியான நாய்களைக் கொல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in