Last Updated : 18 Aug, 2020 05:44 PM

 

Published : 18 Aug 2020 05:44 PM
Last Updated : 18 Aug 2020 05:44 PM

கோகோ கேர்ள்: பத்திரிகைக்கு ஆசிரியரான 6 வயதுச் சிறுமி!

உலகின் பல நாடுகளில் வசிக்கும் ஆப்பிரிக்கர்களின் குழந்தைகள், தங்கள் நிறம் மற்றும் தலைமுடியின் தன்மை காரணமாகப் பள்ளிகளில் மோசமான கிண்டல்களுக்கு உள்ளாகிறார்கள். தன்னம்பிக்கை இழந்து, தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களை மீட்டுக்கொண்டு வருவது பெற்றோருக்கு மிகவும் சவாலான விஷயம்.

இங்கிலாந்தில் வசிக்கும் ஆப்பிரிக்கரான செர்லினா ஃபாய்டின் 6 வயது மகள் ஃபெய்த்தும் இந்தப் பிரச்சினையில் இருந்து தப்ப முடியவில்லை. மற்றவர்கள் எல்லாம் வெள்ளையாக இருக்க, நான் மட்டும் கறுப்பாகவும் சுருள் முடியுடனும் ஏன் இருக்கிறேன் என்று தன் அம்மாவிடம் கேட்டார். ''உலகில் எல்லோரும் வெள்ளை மனிதர்களாக இருக்கவில்லை. வெள்ளை, கறுப்பு, மாநிறம் என்று அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் ஆப்பிரிக்கர்கள் என்பதால் அடர் கறுப்பில் இருக்கிறோம். நிறம் குறித்து தாழ்வாக நினைக்க எதுவும் இல்லை'' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் அம்மா. ஆறு வயதுக் குழந்தையால் புரிந்துகொள்ள முடியவில்லை. மகளை வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கேயும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது? வேறு பள்ளியில் சேர்ப்பது சரியான தீர்வு அல்ல என்பதைப் புரிந்துகொண்டார்.

ஆப்பிரிக்கக் குழந்தைகளுக்குத் தங்கள் நிறம், முடி குறித்த புரிதலை ஏற்படுத்தவும் ஆப்பிரிக்கர் அல்லாத குழந்தைகள் ஆப்பிரிக்க மக்களின் வரலாறு, கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வகையிலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார் செர்லினா.

அப்போதுதான் கரோனாவின் பிடியில் உலகமே சிக்கித் தவிக்க ஆரம்பித்த தருணம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்குப் படிப்பதற்காகப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க நினைத்தார்.

“குழந்தைகளுக்கான புத்தகங்கள் முழுவதும் வெள்ளைக் குழந்தைகளை மையமாக வைத்தே எழுதப்பட்டிருந்தன. இங்கிலாந்தில் கணிசமான அளவில் ஆப்பிரிக்கர்களும் ஆசியர்களும் வசித்து வருகிறோம். ஆனால், புத்தகங்களில் அவர்களைப் பற்றிய வரலாறோ, கதையோ இல்லை என்பது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனே ஆப்பிரிக்கக் குழந்தைகளுக்கான ஒரு பத்திரிகையைக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். ஏற்கெனவே எனக்குப் பதிப்பகத் துறையில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால், உடனே களத்தில் இறங்கினேன்” என்கிறார் செர்லினா.

கரோனாவால் அச்சு ஊடகங்கள் சரிவைச் சந்தித்து வரும் சூழலில், புதிதாக ஒரு பத்திரிகையை ஆரம்பிப்பது சரியல்ல என்று செர்லினாவின் நண்பர்கள் எச்சரித்தனர். ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்குப் பிறகு உலகம் எங்கும் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் மேல் நம்பிக்கை வைத்தார் செர்லினா.

குடும்பமே இதழ் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டது. ’கோகோ கேர்ள்’ என்று பத்திரிகைக்குப் பெயர் சூட்டப்பட்டது. வசீகரமான ஆப்பிரிக்கக் குழந்தையின் படம் அட்டையை அலங்கரித்தது. இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இதழாக மலர்ந்தது. ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ‘கோகோ கேர்ள்’ இங்கிலாந்து வாழ் ஆப்பிரிக்கர்களின் முதல் பத்திரிகையாக வெளிவந்தது. இந்தப் பத்திரிகையின் நிறுவனராக செர்லினாவும் ஆசிரியராக ஃபெய்த்தும் செயல்படுகின்றனர். 6 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கான பத்திரிகை இது.

“ஆப்பிரிக்கக் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் விதத்திலும் தங்கள் வரலாறு குறித்துப் பெருமைகொள்ளும் விதத்திலும் இந்தப் பத்திரிகையை உருவாக்கியிருக்கிறோம். ஆப்பிரிக்கக் குழந்தைகளை முன் வைத்து வெளிவந்தாலும் இது அவர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து குழந்தைகளுமே இதைப் படிக்க வேண்டும். அப்போதுதான் சகமனிதர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டாகும். உருவம், நிறம், முடி காரணமாக யாரையும் தாழ்வாக நினைக்க மாட்டார்கள்.

கோகோ கேர்ள் பத்திரிகைக்கு நாங்கள் நினைத்ததைவிட அதிகமான ஆதரவு கிடைத்திருக்கிறது. ஒரே மாதத்தில் 11 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. ஒரே நாளில் ஆயிரம் பத்திரிகைகளை அனுப்பிய ஆச்சரிய அனுபவமும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மீடியாவில் ஆப்பிரிக்கர்களைப் பற்றி எதிர்மறையான கருத்துகளே வெளிவருகின்றன. அவற்றை மாற்றும் விதத்தில் ‘கோகோ பாய்’ என்ற பத்திரிகையையும் தொடங்கியிருக்கிறோம்” என்கிறார் செர்லினா.

பத்திரிகைக்கான ஆர்டர்கள் தினமும் வந்துகொண்டேயிருக்கின்றன. அதனால் விற்பனை என்பது செர்லினாவுக்கு ஒரு பெரிய விஷயமாகவே இல்லை. பல நாடுகளில் வசிக்கும் ஆப்பிரிக்கர்களும் ஆர்வமாக வாங்குகிறார்கள். பிரபல கால்பந்து அணிகள் பத்திரிகையின் லோகோவைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்கிறார்கள். ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்துள்ளன. சில நாடுகளில் இந்தப் பத்திரிகையை மொழிபெயர்த்துப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்கிறார்கள்.

ஆப்பிரிக்கச் சிறுவர்களால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கும் செர்லினா, முக்கியமான பத்திரிகைகளுடன் தங்களின் பத்திரிகைகளும் விற்கப்படும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x