Published : 18 Aug 2020 04:34 PM
Last Updated : 18 Aug 2020 04:34 PM

கரோனா பரவல் எதிரொலி: சமூக இடைவெளியை தீவிரப்படுத்திய தென் கொரியா

தொடர்ந்து 5வது நாளாக கரோனா தொற்று மூன்று இலக்க எண்களை தொட்டுள்ளதால் தென் கொரியாவில் சமூக இடைவெளியை தீவிரமாக கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய அதிகாரிகள் தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் தென் கொரியாவில் 246 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,761 ஆக அதிகரித்துள்ளது.

306 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். தொடர்ந்து 5 வது நாளாக தென்கொரியாவில் கரோனா பாதிப்பு மூன்றிலக்க எண்களை தொட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பார்கள், இரவு விடுதிகளில் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவாலயங்களில் 50 பேர்மட்டுமே பிரார்த்தனைகளுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் குறித்து தென் கொரிய பிரதமர் சுங் சயே-கயூன் கூறும்போது, “ இப்போது வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாவிட்டால், நாம் சமூக இடைவெளிகளில் உச்ச நடவடிக்கைகளை கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏப்ரல் மாதத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணித்திருந்தோம். ஆனால், எங்கள் கணிப்பு பொய்யாகியுள்ளது. மே மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் மக்கள் புழக்கம் அதிரிகத்தது. அதன் விளைவாக தற்போது இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று தென்கொரிய நோய் தடுப்பு மையம் முன்னரே தெரிவித்து இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x