

உலகின் பல நாடுகளிலும் இந்திய சுதந்திர தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதிலும், 74-வதுசுதந்திரதினம் நேற்று நாடுமுழுவதும் சமூக விலகலைக் கடைபிடித்து, சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
டெல்லியில் பிரதமர் மோடி, நேற்று காலை ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி 74-வது சுதந்திரத்தினத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதுபோலவே பல்வேறு மாநில முதல்வர்களும் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்திய சுதந்திர தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடினர்.
இதுபோலவே நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டே்ட கட்டிடம் இந்திய தேசியக்கொடியின் வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
கனடா நாட்டிலும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நயாகரா நீர் வீழ்ச்சி மீது இந்திய தேசியக்கொடியின் வண்ணத்தில் மின் ஒளி பாய்ச்சப்பட்டு கண்கொள்ள காட்சியாக இருந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்திலும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக துபாயில் உள்ள புஜ் கலிபா கோபுரம் இந்திய தேசியக்கொடியின் வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.