Last Updated : 16 Aug, 2020 07:46 AM

 

Published : 16 Aug 2020 07:46 AM
Last Updated : 16 Aug 2020 07:46 AM

நான் அதிபரானால் இந்தியா சந்திக்கும்  அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்போம்: ஜோ பிடன் பேச்சு

அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பேசிய காட்சி :

வாஷிங்டன்

நான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்தியா தற்போது சந்தித்துவரும் அனைத்துப் பிரச்சினைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்போம், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உறுதியளித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இந்தியாவின் 74-வது சுதந்திரதினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமெரி்க்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுடன் சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு முன்னணியில் இருந்த நான்தான் பணியாற்றினேன். அப்போது நான் கூறியது, இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்புநாடுகளாக மாறினால், கூட்டாளிகளாக இருந்தால், இந்த உலகம் பாதுகாப்பானதாக மாறும் என்றேன்.

நான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால், இந்த வார்த்தையை நான் தொடர்ந்து நம்புவேன். இந்தியா தற்போது சந்தித்துவரும் உள்நாட்டு பிரச்சினைகளிலும், எல்லைப் பிரச்சினைகளிலும் அச்சுறுத்தல்களிலும் அந்நாட்டுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும், பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றம், உலகல சுகாதார பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம்.

அதுமட்டுமல்லாமல் இரு நாடுகளிலும் ஜனநாயகத்தை வலுப்பெறுவதற்கு உழைப்போம்.ஏனென்றால் இரு நாடுகளிலும் பன்முகத்தன்மைதான் பரஸ்பர வலிமை

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் ஆழம் அதிகரிக்கும், இரு நாடு மக்களுக்கு இடையிலான நட்புறவும் வளரும். அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அமெரி்க்காவில் வாழும் இந்தியர்கள் நலனில் அக்கறையும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுதற்கு தேவையான நடவடிக்கைளையும் எடுப்பேன்.

என்னுடைய தொகுதியான டெலாவேரிலும், செனட்டில் உள்ள என்னுடைய அலுவலக ஊழியர்கள், ஒபாமா நிர்வாகத்தில் நான் பணியாற்றியபோது இருந்த காலகட்டம் என அனைத்திலும் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு அதிகமான வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த அதிபரின் நிர்வாகத்திலும் இந்தியர்களுக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கப்பட்டதில்லை.

அதுமட்டுமல்லாமல் துணை அதிபர் பதவிக்கு என்னுடைய தோழி கமலா ஹாரிஸைத் தேர்வு செய்துள்ளேன். அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல்முறையாக இந்தியாவைச் பூர்வீகமாகக் கொண்ட பெண் தேர்தலில் போட்டியிடுகிறார்.

கமலா ஹாரி்ஸைப் பற்றி நமக்கு நன்கு தெரியும், மிகவும் திறமையாசாலி. எந்தச் சூழலுக்கும் தன்னை ஆட்படுத்தி, அறிவுப்பூர்வமாக செயல்படக்கூடியவர். கமலா ஹாரிஸ் , தனது வாழ்க்கையில் எடுத்துக்காட்டாக, உத்வேகமாக அவரின் தாய் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்ததை நினைத்துத்தான் பெருமைப்படுகிறார். அமெரிக்காவுக்கு கல்வி பயில வந்து திருமணம் செய்து, இரு குழந்தைகளைப் பெற்று தனது தாய் வளர்த்ததை பெருமையாகக் கொள்கிறார். அவரின் பெருமையை, உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

உங்களின் தியாகம், உங்கள் குடும்பத்தின் துணிச்சல் போன்றவைதான் சமூகத்தின் தூண்களாகவும், நாட்டின் தூண்களாகவும் மாறின. நீங்கள் தேசப்பற்று மிக்கவர்கள், கரோனா காலத்தில் முன்களத்தில் பணியாற்றியவர்கள். இனவெறிக்கு எதிராக கமலா ஹாரிஸ் குரல் கொடுத்து வருபவர். அமெரிக்கா என்பது அனைத்து மதத்தினருக்கும், அனைத்து நாட்டினருக்கும், உரித்தான நாடு, அமைதியாக வாழக்கூடிய நாடு என்ற உறுதி மொழியையும் அளித்துள்ளீர்கள்.

ஆனால், இப்போது இது மாறி, கடினமாகியுள்ளது. ஹெச்-1பி விசா முடக்கம், வெளிநாட்டினருக்கு பல தடைகள் போன்றவை வந்துள்ளன. ஆனால், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் உழைப்பால்தான் அமெரி்க்கா வலிமையாக மாறியது என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறு பிடன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x