‘ரெட் சூப்பர் ஜெயண்ட் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் பீட்டல்ஜூஸ் ஒளியை இழந்து வருவது ஏன்? - விஞ்ஞானிகள் விளக்கம்

பீட்டல்ஜூஸ் மகா நட்சத்திரம்.
பீட்டல்ஜூஸ் மகா நட்சத்திரம்.
Updated on
2 min read

ஓரியன் என்ற விண்மீன் கூட்டத்தில் மிகப்பெரிய சூப்பர் ஜெயண்ட் நட்சத்திரம் என்று அழைக்கப்படும் ‘பீட்டல்ஜூஸ்’ என்ற மகாநட்சத்திரம் அதன் ஒளியை, பிரகாசத்தை கடந்த அக்டோபரில் இழக்கத் தொடங்கியது. பிப்ரவரி மத்தியில் அதன் பிரகாசத்தில் மூன்றில் 2 பங்கை இழந்துள்ளது.

ஹப்பிள் விண்வெளி நுண் நோக்கி மூலம் கிடைத்த தகவல்களின்படி விஞ்ஞானிகள் அதன் ஒளி ஏன் மங்கலாகி வருகிறது என்பதற்கு விளக்கங்களை அளித்துள்ளனர். அதாவது பீட்டல்ஜூஸ் மகா நட்சத்திரம் அதி உஷ்ண, அடர்த்தியான வஸ்துத் தொகுதிகளை விண்வெளியில் வெளியிடுகிறது இது பிறகு குளிர்ச்சியாகி தூசி மண்டலத்தை உருவாக்குகிறது. இது நட்சத்திரத்தை மங்கலாகக் காட்டுகிறது, அதாவது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மங்கலாகத் தெரிகிறது என்கின்றனர்.

பீட்டல்ஜூஸ் என்பது சிகப்பு ராட்சத நட்சத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. நட்சத்திரங்களில் மிகப்பெரியது. சூரியனை விட 10 மடங்குக்கும் அதிகமான நிறை கொண்டது. நம் சூரியக் குடும்பத்தின் மையத்தில் இந்த சூப்பர் ஜெயண்ட் நட்சத்திரம் இருந்தால் அதன் மேற்பரப்பு ஜுபிடர் வரை நீட்சி கொண்டதாக இருக்கும்.

இந்த பீட்டல்ஜூஸ் மகா நட்சத்திரம் அதன் வாழ்க்கை சுழற்சியின் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. அது தன்னுடைய எரிபொருளை செலவழித்து விரைவில் வெடித்துச் சிதறும், இந்த நிகழ்வுக்குப் பெயர் சூப்பர்நோவா. விரைவில் என்று விஞ்ஞான பொருளில் கூறினால் அது 1 லட்சம் முதல் 10 லட்சம் ஆண்டுகள் என்று பொருள். காலம் பற்றிய நம் தினசரி பிரயோகத்துடன் இதனைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

இது வெடிக்கும்போது நியூட்ரினோக்களை வெளியிடும். இது ஒளியை விடவும் வேகமாகப் பயணிக்கக் கூடியது. நியூட்ரினோக்கள் தீங்கானது அல்ல. பருப்பொருளை அது எந்த ஒரு விளைவும் ஏற்படுத்தாமல் கடக்கும் தன்மை கொண்டது நியூட்ரினோ.

இந்நிலையில் விஞ்ஞானிகள் கூறும்போது, “சூப்பர்நோவா கட்டத்துக்கு பீட்டல்ஜூஸ் எவ்வளவு விரைவில் செல்லும் என்று கூற முடியாது. அதாவது நம் வாழ்நாள் காலக்கட்டத்தில் இது நடந்து விடாது. ஆனால் இந்த நட்சத்திரம் வெடிப்பதற்கு ஒருவாரத்துக்கு முன்பாகவோ அல்லது முதல் நாள் இரவோ எப்படி செயல்படும் என்பது நமக்குத் தெரியாது” என்கின்றனர்.

சூப்பர்நோவா நிகழ்வில் பீட்டல்ஜூஸ் போன்ற மகா பெரிய நட்சத்திரங்கள் கார்பன், ஆக்சிஜன், கால்சியம், இரும்பு போன்ற கனரக துகள்களை வெளியிடும். இது புதிய தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகக் காரணமாக விளங்கும்.

நம் சூரியக் குடும்பத்துக்கு 725 ஒளி ஆண்டுகள் தொலைவில் பீட்டல்ஜூஸ் உள்ளது. ஒளி ஆண்டு என்பது ஒரு ஆண்டில் ஒளி பிரயாணிக்கும் தூரம் ஆகும். அதாவது 9.5 ட்ரில்லியன் கிமீ.

கடந்த அக்டோபரில் இது தன் ஒளியை இழக்கத் தொடங்கியது, பிப்ரவரியில் கிட்டத்தட்ட அதன் மூன்றில் 2 பங்கு ஒளியை இழந்துள்ளது. ஏப்ரலில் அதன் வழக்கமான ஒளிர்தலுக்குத் திரும்பியது. ஆனால் மீண்டும் மங்கலாகி வருகிறது, இதனை உறுதி செய்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

(ஏஜென்சி மற்றும் அறிவியல் தரவுகள் உதவியுடன்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in