

இந்தியாவின் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 20 இந்தியவீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இரு நாடுகளின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து எல்லையில் படைகள் குறைக்கப்பட்டு பதற்றம் தணிந்து வருகிறது. எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து அமெரிக்க செனட் சபையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜான் கார்னின் மற்றும் செனட் சபை தேர்வுக் குழுவில் உள்ள மார்க் வார்னர் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தீர்மானம் கொண்டு வந்தனர்.
அந்த தீர்மானத்தில் ஜான்கார்னின் கூறுகையில், ‘‘அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான நட்புறவு உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியாவை நாம் ஆதரிக்க வேண்டியது முக்கியமானது’’ என்றார்.
தீர்மானத்தை அறிமுகப்படுத்தி பேசிய மார்க் வார்னரும் சீனாவை கடுமையாக கண்டித்தார்.