

பெய்ரூட் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர்கள் பலர் பதவி விலகியதைத் தொடர்ந்து லெபனான் பிரதமர் ஹசன் டயப் தனது ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
மேலும், பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் ஓட்டல் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். உலக மக்களையே இந்த பெய்ரூட் விபத்து அதிர்ச்சியடைய செய்தது.
இந்த நிலையில் பெய்ரூட் வெடி விபத்துக்கு லெபனான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மக்கள் போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து லெபனான் அமைச்சரவையிலிருந்து ஒவ்வொரு அமைச்சராக ராஜினாமா செய்து வருகின்றனர். நீதித்துறை அமைச்சர் மரியா கிளாடி நஜிம், பொருளாதாரத் துறை அமைச்சர் காசி வஸ்னி, தகவல் துறை அமைச்சர் மானல் அப்தெல், சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக துறை அமைச்சர் டாமினஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் லெபனான் பிரதமர் ஹசர் டயப் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதுகுறித்த அறிவிப்பை விரைவில் தொலைக்காட்சியில் அறிவிக்க இருக்கிறார் என்றும் லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.